பதவி விலகக் கோரி பிரிட்டி‌‌ஷ் பிரதமருக்கு நெருக்குதல்

பதவி விலகக் கோரி பிரிட்டி‌‌ஷ் பிரதமருக்கு நெருக்குதல்

2 mins read
59304eab-bd9a-47d1-9718-917fa803f76d
மார்க்ஃபீல்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தொழிற்கட்சியின் திரு ஆண்டி பர்னம் (இடம்), தலைமைத்துவப் போட்டியை எதிர்நோக்கியுள்ள பிரதமர் கியர் ஸ்டார்மர். - படம்: பிபிசி
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரைப் பதவி விலகக் கோரும் அழைப்புகள் அதிகரித்திருக்கின்றன.

அதற்கான கால அட்டவணையை உருவாக்கும்படி அவரின் தொழிற்கட்சி உறுப்பினர்கள் நெருக்குதல் அளிக்கின்றனர். மார்க்ஃபீல்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திரு ஆண்டி பர்னம் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைமைத்துவ மாற்றத்திற்கான அழைப்பு வலுத்து வருகிறது.

கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியின் முன்னாள் மேயரான திரு பர்னமிடம் பதவியை ஒப்படைக்கும் திட்டத்தை அறிவிக்குமாறு கட்சி உறுப்பினர்கள் திரு ஸ்டார்மரைக் கேட்டுக்கொண்டுள்ளனர். தலைமைத்துவப் போட்டியில் சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.

இருப்பினும், எந்தவொரு சவாலையும் எதிர்த்துப் போராடப் போவதாக பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கூறியுள்ளார். பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

வார இறுதியில் நிலைமை குறித்துச் சிந்தித்துப் பார்க்கும்படி திரு பர்னமின் நெருங்கிய வட்டாரங்கள் திரு ஸ்டார்மரைக் கேட்டுக்கொண்டனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தார் ஆகியோரின் கருத்துகளைச் செவிமடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் மேயரின் குழுவினரும் இன்னோர் உத்தேசப் போட்டியாளரான திரு வெஸ் ஸ்ட்ரீட்டிங் தரப்பினரும் வார இறுதியில் ஊடகங்களுக்கு நேர்காணல் எதுவும் அளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளனர். பிரதமர் தம் மனத்தை மாற்றிக்கொள்வதற்கு நேரம் கொடுக்க அவர்கள் விரும்புவதையே அது காட்டுவதாக நம்பப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் ஸ்டார்மர் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தம் அமைச்சர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டது. கட்சிக்குள் தமக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதைக் கணிக்குமாறு அமைச்சர்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் ஸ்டார்மர் தம்முடைய பதவிக்காலத்தின் முக்கியமான கட்டத்தை எதிர்நோக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அன்றுதான் வாராந்தர அமைச்சரவைக் கூட்டத்திற்காக மூத்த அமைச்சர்கள் ஒன்றுகூடவிருக்கின்றனர்.

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில், மன்ற உறுப்பினராகத் திரு பர்னம் அதிகாரபூர்வமாய்ப் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்.

அவர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். அவர் தொழிற்கட்சியின் தலைவராவதற்கு அது வழிவிட்டுள்ளது.

அதற்குக் கட்சியின் 81 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திரு பர்னம் எளிதில் அந்த இலக்கை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு ஸ்ட்ரீட்டிங்கிற்கும் போட்டியிடுவதற்குப் போதிய எண்ணிக்கையில் மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், திரு பர்னமிற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்தால் அவர் பின்வாங்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்
பிரிட்டன்பிரதமர்தலைமைத்துவம்கட்சி