புற்றுநோய் மருந்துமாத்திரைகள் சிலவற்றின் விலை 90% குறைவு

புற்றுநோய் மருந்துமாத்திரைகள் சிலவற்றின் விலை 90% குறைவு

படம்: கெட்டி இமேஜஸ், ஐ‌ஸ்டாக்ஃபோட்டோ

29 Oct 2026 - 7:45 pm

2 mins read

சென்னை: இந்தியாவில் சில புற்றுநோய் மருந்துமாத்திரைகளின் அதிகபட்ச சில்லறை விலையை 90 விழுக்காட்டிற்கும் மேல் குறைத்து தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 543 புற்றுநோய் மருந்து வகைகளின் விலை கணிசமாகத் திருத்தப்பட்டுள்ளது.

அட்டவணையில் இடம்பெறாத 137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துமாத்திரைகளின் வர்த்தக வரம்பை அதிகபட்ச சில்லறை விலையில் 30 விழுக்காடாகக் கட்டுப்படுத்த ஆணையம் முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, இந்தப் புதிய விலைக் குறைப்பு நடவடிக்கை, வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.

குறிப்பிட்ட மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பால்போசிப்லிப் மருந்தின் விலை ரூ.40,421லிருந்து ரூ.2,270ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமார்த் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் தியோடீபா மருந்தின் விலை ரூ.80,072லிருந்து ரூ.7,150ஆகக் குறைந்துள்ளது.

மேலும் தசாடினிப், லென்வாடினிப், அபிராடெரோன், ஒலாபரிப் உள்ளிட்ட மருந்துமாத்திரைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் ரிபோசிக்லிப் விலை மாற்றமின்றி ரூ.24,435 ஆகவே நீடிக்கிறது. டாக்ரிஸ்ஸோ, டெசென்ட்ரிக் , டார்சலெக்ஸ், இம்ஃபின்சி உள்ளிட்ட மற்ற மருந்துகளின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

புற்றுநோய் சிகிச்சைக்கான விநியோகத் தொடரில் நிலவும் கூடுதல் செலவு, அதிக லாப வரம்புகுறித்து உச்ச நீதிமன்றம் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தது.

இதனை அடுத்து, பொதுநலன் கருதி ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அக்டோபர் 27ஆம் தேதிவரை மருந்து நிறுவனங்கள் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் விலை குறைக்கப்பட்டபோதும் மிக விலையுயர்ந்த மருந்துகள் நோயாளிகளுக்கு இன்னமும் எட்டாக்கனியாகவே நீடிப்பதாக அகில இந்திய மருந்து நடவடிக்கைக் கட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன் தெரிவித்தார்.

விலைக் கட்டுப்பாட்டு ஆணை 2013இன்கீழ் மருந்துகளின் விலை நிர்ணயிக்கப்படுவதற்குப் பதிலாக, பழைய உற்பத்திச் செலவு அடிப்படையிலான சூத்திரப்படி குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்