கோலாலம்பூர்: மலாக்கா மாநிலத்தில் வெற்றிபெற்ற தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணிக்குப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தின் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 தொகுதிகளை கைப்பற்றியதாக தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் ஒன்றிணைந்த கூட்டணி சனிக்கிழமை (நவம்பர் 14) மாலை அறிவித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை அந்தக் கூட்டணி பெற்றுள்ளது.
அந்த வெற்றி பிரதமர் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் நான்கு தொகுதிகளில் மட்டுமே பக்கத்தான் ஹரப்பான் வென்றுள்ளது. இது, 2021ல் நடைபெற்ற தேர்தலில் வென்றதைவிட ஓர் இடம் குறைவாகும்.
மலாக்காவில் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூட்டத்தினரின் ஆரவாரக் கூச்சல்களுக்கு இடையில் தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி தங்கள் கூட்டணி வென்றதாக அறிவித்தார்.
வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அவரது வெற்றியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
“இந்த வெற்றியின் மூலம், பாரிசான் நேஷனல் (தேசிய முன்னணி), பெரிக்காத்தான் நேஷனல் ஆகியன ஒன்றிணைந்து அடுத்த மலாக்கா மாநில அரசாங்கத்தை அமைக்கும்,” என்று மலேசியத் துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான திரு ஸாஹிட் ஹமிடி கூறினார்.
தேர்தல் முடிவுகளின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், புக்கிட் பாருவில் உள்ள பக்கத்தான் ஹரப்பான் செயல்பாட்டு நிலையத்தில் ஐம்பதுக்கும் குறைவான ஆதரவாளர்களே கூடியிருந்தனர். அங்கு ஒரு சோகச்சூழல் காணப்பட்ட நிலையில், தமது கூட்டணியின் தோல்வியைப் பக்கத்தான் ஹரப்பானின் மலாக்கா தலைவர் அட்லி ஸஹாரி ஒப்புக்கொண்டார்.
“தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். மலாக்கா மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
2018 முதல் 2020 வரை மலாக்கா மாநில முதல்வராக இருந்த திரு அட்லி, இம்முறை தமது புக்கிட் காட்டில் தொகுதியில் முதன்முறை களமிறங்கிய பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ரிட்ஸுவான் முகம்மது சரிஃபிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேசிய முன்னணிக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் அன்வார், தமது அரசாங்கம் மலாக்கா மாநிலத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
