தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிடவில்லை: அன்வார் இப்ராகிம்

தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிடவில்லை: அன்வார் இப்ராகிம்

2 mins read
5425e557-4559-465b-8608-e7440909eafe
மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் வசிக்கும் மலேசிய வாக்காளர்கள் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மலேசியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து, சிங்கப்பூர் பிரதமரைத் தொடர்புகொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதை மலேசியா ஊக்குவிப்பதில்லை என்றும் எனினும், அங்குள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து தாம் கூறியது, வாக்காளர் வருகையை அதிகரிப்பதற்கான தனிப்பட்ட கருத்தே தவிர, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிடும் முயற்சி அல்ல என்று பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சனிக்கிழமையன்று (ஜூலை 11) நடைபெறுகிறது.

தேர்தல் தேதிகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் கொண்ட, தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்பாகத் தேர்தல் ஆணையம் விளங்குவதாக திரு அன்வார் குறிப்பிட்டார்.

எனினும், சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் சனிக்கிழமைகளில் அரை நாள் வேலை செய்யக்கூடும் என்பதால், அவர்கள் எளிதாக மலேசியா திரும்பி வாக்களிக்க ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளாக இருக்கும் என்ற நோக்கில் மட்டுமே தாம் அக்கருத்தைக் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்தாலும் அது அந்த அமைப்பின் சுதந்திரமான முடிவு என்றும் தமது கருத்துகளைத் தலையீடாகக் கருதக்கூடாது என்றும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களித்தல் மாநிலம் முழுவதும் சுமுகமாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காலை 10.30 மணி நிலவரப்படி, காவல்துறையைச் சேர்ந்த தகுதிபெற்ற வாக்காளர்களில் 36.3 விழுக்காட்டினர் (4,257 பேர்) தங்களது வாக்குரிமையைச் செலுத்திவிட்டதாக ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்ஷத் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 53 வாக்குச்சாவடிகளிலும் இந்த நடைமுறை எவ்வித இடையூறுமின்றி நடந்ததாகக் கூறப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பேசிய அவர், முன்னாள் ஜோகூர் மாநிலச் சட்டமன்ற நாயகர் முகம்மது புவாட் ஜகார்ஷிக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட புகார் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கட்சிக் கொடிகளைச் சேதப்படுத்தப்பட்டது குறித்தே பெரும்பாலான புகார்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்அன்வார் இப்ராகிம்தேர்தல்