தோக்கியோ: ஜப்பானின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார் திருவாட்டி சானே தகாய்ச்சி. இந்தத் தொலைபேசி உரையாடல் சனிக்கிழமையன்று (அக்டோபர் 25) நிகழ்ந்தது.
ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை தரப்போவதாக அதிபர் டிரம்ப்பிடம் திருவாட்டி தகாய்ச்சி தெரிவித்தார்.
சீனா, இந்தோ-பசிபிக் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் மிக முக்கியமான உத்திபூர்வப் பங்காளியாக ஜப்பான் திகழ்கிறது என்று பிரதமர் தகாய்ச்சி கூறியதாக அவரது அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தி அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல அதிபர் டிரம்ப்புடன் தாமும் உறுதி பூண்டதாக திருவாட்டி தகாய்ச்சி கூறினார்.
ஆசியான் உச்சநிலைமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் டிரம்ப் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியாவுக்குத் தமது ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது பிரதமர் தகாய்ச்சியிடம் தொலைபேசி மூலம் அதிபர் டிரம்ப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிபர் டிரம்ப் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 27) ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 28) பிரதமர் தகாய்ச்சியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

