பேங்காக்: காஸாவில் ஹமாஸ் இயக்கம், பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐந்து தாய்லாந்து நாட்டவரை விடுவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தற்பொழுது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருக்கும் அந்த ஐவருடனும் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) தாய்லாந்தின் பிரதமர் உரையாடியதாக கூறப்படுகிறது.
தற்பொழுது இஸ்ரேலுக்கு பயணமாகியுள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சாங்கியாம்போங்சா தாம் அந்த ஐவருடன் மேற்கொண்ட முதல் சந்திப்பு உரையாடலில் அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகக் கூறினார். அந்த ஐவரும் அவர்களின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
அந்த ஐவரையும் பிரதிநிதித்துப் பேசியவர், தாங்கள் அனைவரும் மிகுந்த நன்றியுடன் இருப்பதாகவும் அவர்கள் புத்துயிர் பெறும் வண்ணம் உதவிய அனைவர் பற்றியும் எண்ணும்போது நெகிழ்ந்திருப்பதாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் நடந்தது முதல் தாம் மிகுந்த கவலைகொண்டதாகவும் நிலவரம் குறித்து தாம் அணுக்கமாக கவனித்து வந்ததாகவும் தாய்லாந்துப் பிரதமர் திருவாட்டி பெய்டோங்டார்ன் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தனக்கு நிம்மதி அளித்துள்ளதாகவும் இதில் அனைவரும் பெரு முயற்சிகள் எடுத்ததை தாம் பாராட்டுவதாகவும் கூறினார்.