லண்டன்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் சர்ச்சையின் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் சார்ல்ஸ் மன்னரின் தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் எல்லாப் பட்டங்களும் பறிக்கப்பட்டுள்ளன.
இளவரசர் ஆண்ட்ரூ, இனிமேல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என அழைக்கப்படுவார் என்று பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்தது.
நீண்ட நாளாகத் தங்கி வந்த வின்சர் அரண்மனையிலிருந்து வெளியேறும்படி திரு ஆண்ட்ரூவிடம் கூறப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குற்றஞ்சாட்டிய முக்கியமானவர்களில் ஒருவர், திரு ஆண்ட்ரூவின்மீது அதே பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து பிரிட்டனின் பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் தனக்கு எதிரான குற்றங்களைத் தொடர்ந்து மறுத்தாலும் இந்தக் கண்டன நடவடிக்கைகள் தேவைப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்தவித வகையான துன்புறுத்தலாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லார்க்கும் மன்னர் அனுதாபப்படுவதாக அரண்மனை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட வர்ஜினியா ஜுஃப்ரெயின் இறப்புக்குப் பிறகு வெளிவந்த அவரது அனுபவக் கதை நூலில் திரு ஆண்ட்ரூவுடன் மூன்று முறை பாலியல் உறவில் ஈடுபட சட்டவிரோதமாக வரவழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆலோசனையை நாடிய பின்னர் மன்னர் சார்ல்ஸ் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அந்த முடிவைத் திரு ஆண்ட்ரூ எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

