நியூயார்க்: மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் சிவப்பு நிறக் கம்பளிச்சட்டை $1.1மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் (S$1.5 மில்லியன்) ஏலத்தில் விற்கப்பட்டதாக சோதேஸ் ஏலநிறுவனம் வியாழக்கிழமை கூறியது.
அந்தச் சிவப்பு நிறக் கம்பளிச்சட்டையில் வெள்ளை நிறச் செம்மறி ஆடுகள் வரிசையாக நிற்கும். அதன் நடுவே இருக்கும் ஆடு மட்டும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.
இளவரசி டயானா இந்தச் சட்டையை முதன்முதலில் 1981ஆம் ஆண்டு நடந்த போலோ விளையாட்டுப் போட்டியின்போது அணிந்தார்.
அந்தச் சட்டை 50,000 முதல் 80,000 அமெரிக்க டாலருக்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் அது 10 மடங்குக்கு மேல் உயர்ந்து $1.1மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டதாக அந்த ஏல நிறுவனம் தெரிவித்தது.
இதுவரை ஏலம் விடப்பட்ட இளவரசி டயானாவின் ஆடைகளில் இந்தக் கம்பளிச்சட்டை மட்டும் ஆக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் சொன்னது.


