கைதி மரணம் குறித்து விசாரிக்க மலேசியக் காவல்துறைத் தலைவர் உத்தரவு

கைதி மரணம் குறித்து விசாரிக்க மலேசியக் காவல்துறைத் தலைவர் உத்தரவு

படம்: த ஸ்டார்

25 Oct 2026 - 6:39 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் காவல்துறைக் காவலில் இருந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். மாண்ட ஆடவரின் உடலில் காயங்கள் இருந்தன.

இதையடுத்து, கைதியின் மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க மலேசியக் காவல் துறைத் தலைவர் முகம்மது காலித் இஸ்மாயில் உத்தரவிட்டுள்ளார். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

உயிரிழந்தவர் 42 வயதான நூரிஸ்வான், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின்கீழ் செப்டம்பர் 19ஆம் தேதி செராஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.

காவல்துறையின் காவலில் இருந்த நூரிஸ்வான் அக்டோபர் 1ஆம் தேதி மரணமடைந்தார்.

இதனையடுத்து, அந்த வழக்கை விரைவாக விசாரித்து, முடிவுகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று திரு முகம்மது காலித் கேட்டுக்கொண்டுள்ளார்.

மருத்துவமனையின் உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

காவலில் நிகழும் மரணங்களை விசாரிக்கும் சிறப்புக் கட்டுப்பாட்டுத் துறை விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஆய்வக அறிக்கைக்காகக் காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கைதி மரணம் குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.

மாண்டவரின் குடும்பத்தினருக்கு அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

நூரிஸ்வானின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் கேட்டு வருகின்றனர். மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, நூரிஸ்வானின் உள் உறுப்புகளில் எந்தக் காயமும் இல்லாததும் அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் மட்டுமே இருந்ததும் தடயவியல் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்