வாஷிங்டன்: மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிக அளவிலான வரி விதிக்கப்பட இருக்கிறது.
இதற்கான உத்தரவு ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்க நேரப்படி சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருடாந்திர வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
புதிய வரி விதிக்கப்படுவதை மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகள் தடுக்க முடியாது என்று வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்த மூன்று நாடுகளும் முதல் மூன்று இடங்களை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவிலிருந்து மெக்சிகோ மற்றும் கனடா வாயிலாக ஃபென்டனில் எனும் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அதே போல அமெரிக்காவின் வடக்கு, தெற்கு எல்லைப் பகுதிகளிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக அவர் கூறினார்.
எனவே, இவற்றைத் தடுக்கும் நோக்குடன் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளின் பொருள்கள் மீது அதிகளவில் வரி விதிக்கப்படுகிறதா என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
வரி விதிப்பை பேரம் பேசும் உத்தியாக அதிபர் டிரம்ப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளாரா என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
இதை அதிபர் டிரம்ப் மறுத்தார்.
மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுடனான வர்த்தகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
வருமானம் முக்கியம் என்று குறிப்பிட்ட அதிபர் டிரம்ப் , வரித் தொகை அதிகரிக்கப்படக்கூடும் என்று கூறினார்.
இதன்மூலம் அமெரிக்காவின் வருமானம் உயரும் என்றார் அவர்.