வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் செனட் சபையின் ஜனநாயகக் கட்சி முக்கியப் புள்ளிகளும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தினரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்னும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை (ஜனவரி 28) பின்னேரம் கூறின.
இரு தரப்புக்கிடையே இணக்கம் காணப்படாவிட்டால், அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பெரும்பாலான அமைப்புகளுக்கான அரசாங்க நிதியளிப்பில் சிக்கல் ஏற்படும். ஜனவரி 31ஆம் தேதியுடன் அதற்கான ஒப்புதல் காலாவதியாகிவிடும். தற்காப்பு, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகள் இதனால் பாதிக்கப்படும்.
நியூயார்க் செனட்டரும் செனட் சபையில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சுக் ஷுமெர், அரசாங்கம் ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகும் முடங்காமல் செயல்பட வேண்டுமென்றால் குடியரசுக் கட்சியினர் தங்கள் பெருஞ்செலவின மசோதாவிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நீண்டகால அடிப்படையில் தொகை ஒதுக்கும் அம்சத்தைக் கைவிட ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இரு தரப்பையும் சேர்ந்த செனட்டர்கள் சிலர், உள்நாட்டுப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பில் குறுகியகாலத் தீர்வை ஆதரிக்க முன்வந்துள்ளனர். குடிநுழைவு அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து இரு தரப்பும் கலந்துபேசக் கூடுதல் நேரம் அளிப்பது இதன் நோக்கம்.
திரு ஷுமெரும் ஜனநாயகக் கட்சியின் இதர செனட்டர்களும் பல்வேறு திருத்தங்களை முன்வைத்துள்ளனர். அதிகாரிகள் முகக் கவசம் அணியாமல், உடலில் பொருத்தக்கூடிய கேமராவுடன், உரிய ஆணை பெற்றே வீடுகளில் நுழையவேண்டும் என்பதும் அவர்களின் பரிந்துரைகளில் அடங்கும்.
சட்டவிரோதக் குடிநுழைவைத் துடைத்தொழிக்கும் (immigration sweep) நோக்கில் பொது இடங்கள், வேலையிடங்கள், குடியிருப்புகளில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செலவின மசோதாவுக்கான முதல் வாக்களிப்பு அமெரிக்க நேரப்படி ஜனவரி 29ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு (சிங்கப்பூரில் பின்னிரவு 12.30 மணி) நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
மசோதாவில் மிகப் பெரிய மாற்றங்களுக்கான சாத்தியம், வெள்ளை மாளிகைக்கும் ஜன நாயகக் கட்சியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைப் பொறுத்தே அமையும் என்று செனட் பெரும்பான்மைத் தலைவரான ஜான் துனே செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ்வேளையில், திரு ஷுமெரும் அதிபர் டிரம்ப்பும் உடன்பாட்டை நெருங்கிக்கொண்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.

