நாடுகள் மோதியதால் நீடித்த காப்31 உச்சநிலை மாநாடு

நாடுகள் மோதியதால் நீடித்த காப்31 உச்சநிலை மாநாடு

படம்: ஏஎஃப்பி

21 Nov 2026 - 4:25 pm

2 mins read

அண்டாலியா: புதைபடிவ எரிபொருள்களைத் தவிர்க்கும் சர்ச்சைக்குரிய வரைவு உடன்பாடு (draft deal) குறித்து நாடுகள் மோதிக்கொண்டதால், காப்31 பருவநிலை உச்சநிலை மாநாடு அதிகாரபூர்வ நேரத்தைக் கடந்து நீடித்தது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) துருக்கியின் அண்டாலியாவில் காப்31 பருவநிலை உச்சநிலை மாநாடு நடைபெற்றது. எரிசக்தி, அறிவியல், நிதி ஆகியவை குறித்த மோதல்களால் கிட்டத்தட்ட 200 நாடுகள் இரு வாரக் கடும் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் முட்டுக்கட்டை நிலையை எட்டியுள்ளன.

அதன் நிறைவாக கூட்டப்பட்ட இந்த அமர்வில் சில தொழில்நுட்ப விவகாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விரிவான அரசியல் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லையென மாநாட்டுத் தலைவரும் துருக்கிச் சுற்றுச்சூழல் அமைச்சருமான முராத் குரும் தெரிவித்தார்.

தொடக்க உரையின்போது, அவர் எதிர்காலத்தைக் கொல்வதாகக் குறைகூறிக் கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர் வெளியேற்றப்பட்டார். ஈரான் போரால் ஏற்பட்ட எண்ணெய் விலை பிரச்சினை, புவிசார் அரசியல் பதற்றம், ‘சூப்பர் எல் நினோ’ ஆகியவற்றால் காப்31 மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது.

முன்னதாக, புதைபடிவ எரிபொருள்களை விரைவாகக் கைவிடக் கோரிய முதல் வரைவுக்குப் பிறகு, நவம்பர் 19ஆம் தேதி வெளியான இரண்டாவது திருத்தப்பட்ட வரைவில் அதுபற்றிய அனைத்துக் குறிப்புகளும் நீக்கப்பட்டன.

இது பருவநிலை மாநாட்டைப் புதைபடிவ எரிபொருள் மாநாடாக மாற்றும் அபாயம் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.

பிரான்ஸ், பனாமா, சாலமன் தீவுகள் உள்ளிட்ட 12 நாடுகள் புதைபடிவ எரிபொருள்களிலிருந்து விலகுவதை உடன்பாட்டில் சேர்க்கக் கோரின. பனாமா, பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறப்போவதாக மிரட்டியது. மூன்றாவது வரைவு நவம்பர் 21ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2035க்குள் உலகளாவிய எரிசக்தித் தேவையில் 35 விழுக்காட்டை மின்சாரம் மூலம் பூர்த்தி செய்யத் துருக்கியும் ஆஸ்திரேலியாவும் முன்மொழிந்துள்ளன. ஆனால், அது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து வரவேண்டும் எனக் குறிப்பிடாததால், தூய்மையான இலக்கைச் சில நாடுகள் கோருகின்றன.

குறிப்புச் சொற்கள்