ஜோகூர் பாரு: சிங்கப்பூர்-ஜோகூர்பாரு இணைப்பு ரயிலுக்கான (ஆர்டிஎஸ்) உத்தேசக் கட்டணம் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு அரசாங்கங்களிடம் இவ்வாண்டின் 3வது காலாண்டில் சமர்ப்பிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
அந்த உத்தேசக் கட்டண விவரங்களை ரயில் போக்குவரத்தை நிர்வகிக்கும் ஆர்டிஎஸ் ஆப்பரேஷன் (ஆர்டிஎஸ்ஒ) சமர்ப்பிக்கும் என்றார் அவர்.
மலேசியாவின் பொது நிலப்போக்குவரத்து முகவை, சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் வழியாக இரு அரசாங்கங்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுவதே இதன் நோக்கம்.
பின்னர் பொதுமக்களுக்கு ரயில் கட்டண விவரம் வெளியிடப்படும்.
கடந்த பிப்ரவரியில் ஒரு பயணத்திற்கு $5 முதல் $7 வெள்ளி (15.50 - 21.70 ரிங்கிட்) வரை இருக்கலாம் என்று திரு லோக் யோசனை கூறியிருந்தார்.
எல்லைகளுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்வோருக்கு ஒரே கட்டணம் கொண்ட ‘சீசன் பாஸ்’ அறிமுகப்படுத்தப்படுமா என்று அமைச்சர் லோக்கிடம் கேட்கப்பட்டது.
இத்தகைய முறையை இரு அரசாங்கங்களும் வரவேற்பதாகக் கூறிய அவர், வர்த்தகரீதியாகக் கட்டுப்படியாக வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்களுடைய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டால் பொதுப் போக்குவரத்து சேவைக்கான சீசன் பாஸ் பொதுவாக அரசாங்கத்தின் மானியத்தைக் கொண்டிருக்கும். இந்த விவகாரத்தில் மலேசியருக்கு உதவுவது குறித்து நாங்கள் ஆராய்வோம்,” என்று ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.
“எங்களுடைய தரப்பில் வெளிநாட்டவர்களுக்கு நாங்கள் கழிவுகளை வழங்கப்போவதில்லை. சிங்கப்பூரும் அதன் குடிமக்களுக்கு அவ்வாறே சீசன் பாஸ்களை அறிமுகப்படுத்தும்,” என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
மலேசியா-சிங்கப்பூர் கூட்டு முயற்சியான ஆர்டிஎஸ்ஒவுடன் இத்தகைய அனுமதிச் சீட்டுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
செலவுகளை வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியாக வேண்டும். அதனால் எந்த வகையான அனுமதிச்சீட்டாக இருந்தாலும் அது வர்த்தகரீதியில் சாத்தியமாக வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக எம்சிஏ எனும் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவரும் ஆயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வீ கா சியோங், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தினமும் பயணம் செய்யும் பயணிகளுக்கு மாதம் 300 ரிங்கிட் கட்டணத்தில் சீசன் பாஸ் வழங்க வேண்டும் என்று உத்தேச திட்டத்தை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே உலகளாவிய அரசியல் சூழலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன.
புக்கிட் சாகர் நிலையம் மற்றும் குடிநுழைவு, சுங்கம் மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்திற்கான (ICQ) கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டதாக திரு. லோக் கூறினார்.
“அமைப்புகள் கட்டம் கட்டமாக நிறுவப்பட்டு வருவதால் தற்போதைக்கு அதிக எரிபொருள் செலவுகள் ஏற்படவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
ஆர்டிஎஸ் ரயில், ஜோகூரின் புக்கிட் சாகருக்கும் சிங்கப்பூரின் உடலண்ட்சுக்கும் இடையிலான நான்கு கிலோ மீட்டர் பாதையை இணைக்கிறது.
இதன் மூலம் ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்தில் 10,000 பேர் பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த ரயில் சேவை தொடங்கும்போது தினமும் 40,000 பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

