பெர்லின்: ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் சனிக்கிழமை (அக்டோபர் 31) பகல் நேரத்தில் அமைதியாகத் தொடங்கிய இளையர்களின் போராட்டம் மாலை வேளை நெருங்கியதும் வன்முறையாக மாறியது.
விலைவாசி உயர்வு, அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் பெர்லின் உட்பட ஜெர்மனியின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
‘ஜென் ஸி’ என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட இளையர்கள், ‘நாங்கள் பொறுப்பேற்கிறோம்’ என்ற முழக்கத்துடன் நாடெங்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பொதுவாக அமைதியாக நடந்தாலும் சில இடங்களில் பணியிலிருந்த காவல்துறையினரையும் அவசர உதவிப் பணியாளர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கத் தொடங்கினர். பல கடைகள் சூறையாடப்பட்டு பொருள்கள் களவாடப்பட்டன.
பெர்லின், கொலோன், ஹம்பர்க் ஆகிய நகர்களில் வன்முறை அரங்கேறியது. வெடிபொருள்கள், கற்கள், போத்தல்கள் போன்றவற்றைக் கொண்டு அரசாங்கப் பணியாளர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிவைத்துத் தாக்கினர். அதனையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
விலைவாசி உயர்வு, பொதுத் திட்டங்களுக்கான செலவுக் குறைப்பு, பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறை, கட்டாயமாக்கப்பட்ட ராணுவச் சேவை ஆகியவற்றை எதிர்த்து இளையர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இளையர்கள் போராட்டங்கள் நடத்தினர். அவற்றால் கவரப்பட்டு ஜெர்மனியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அதேபோன்று வீதிகளில் இறங்கியதாகப் பலர் கருதுகின்றனர்.
ஃபிராங்க்ஃபர்ட் நகரின் முக்கியக் கடைத்தெருவைக் காவல்துறை மூடிவிட்டது; அங்குப் பல கைது நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மியூனிக், பெர்லின், ஃபிராங்க்ஃபர்ட் ஆகிய நகரங்களில் 18,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்பாட்டாளர்கள் இணையத்தில் வெளியிட்ட கணக்கின்படி, ‘ஜென் ஸி’ எதிர்பார்த்த எண்ணிக்கையில் அது பாதி அளவுதான் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஜெர்மனியின் ஜென் ஸி ஆர்ப்பாட்டக்காரர்களின் பேச்சாளர் லீனா ஃபிரெட்ரிக் “அமைதிக்கும் விடுதலைக்குமான போராட்டம் இது. போருக்கும் கட்டாயப்படுத்தலுக்குமானது அன்று,” என்று கூறினார்.
“எங்களுக்குத் தேவை சுகாதாரம், கல்வித் திட்டங்களின் மேம்பட்டுக்கான ஆதரவு. கட்டாய ராணுவ சேவைக்கு நாங்கள் எதிரானவர்கள். சுமைகளை அனைவரும் சமமாகப் பகிரவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை,” என்றார் திருவாட்டி லீனா.
பிரான்சிலும் சனிக்கிழமை இளையர்கள் தலைமையில் 320,000க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
