மினியபோலிஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கையும் சட்ட விதிமீறல்களையும் கண்டித்து, அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமையன்று (மார்ச் 28) மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளன.
மில்லியன் கணக்கானோர் அப்போராட்டத்தில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரியில் திரு டிரம்ப் அதிபராகத் தமது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியதிலிருந்து, அவருக்கு எதிராக உருவான ‘நோ கிங்ஸ்’ என்ற அடித்தள இயக்கம் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது.
மூன்றாவது முறையாக அத்தகைய நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அந்த இயக்கம் நடத்துகிறது.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான்மீது நடத்திவரும் தாக்குதல்கள், போரின் இலக்குகளையும் போர் முடிவுறுவதற்கான காலக்கெடுவையும் அடிக்கடி மாற்றுவது போன்றவை ஏற்கெனவே டிரம்ப் நிவாகத்தின்மீது கடும் அதிருப்தியில் இருந்த அவர்களின் கோபத்தை மேலும் தூண்டக் காரணமாயின.
திரு டிரம்ப் தமது 79வது பிறந்தநாளைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டாடினார்.
அன்றைய தினம் தங்களின் முதல் போராட்டத்தை ‘நோ கிங்ஸ்’ இயக்கம் நடத்தியது.
வாஷிங்டனில் அவர் நடத்திய ராணுவ அணிவகுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயார்க் முதல் சான் பிரான்சிஸ்கோ வரை மில்லியன் கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டாவது போராட்டத்தை அந்த இயக்கம் நடத்தியது.
கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள் அதில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தற்போது, அமெரிக்க மக்களிடம் அதிபர் டிரம்ப்பின் செல்வாக்கு 40 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அவரின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28ஆம் தேதி நடக்கும் போராட்டம் அந்தத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

