நியூக்: கிரீன்லாந்துத் தலைநகர் நியூக்கில் புதிய வளாகத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிரீன்லாந்தை கைவசப்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மூண்டது.
“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டோனல்ட் டிரம்ப்பிடமும் அவரது அரசாங்கத்திடமும் எங்கள் அரசாங்கம் ஏற்கெனவே கூறியிருக்கிறது,” என்றார் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த அக்காலுக்குலுக் ஃபொன்டெயின்.
“நாங்கள் விடுக்கும் செய்தி அமெரிக்கர்களுக்கும் உலகத்துக்குமானது. இந்த ஜனநாயக உலகில் வேண்டாம் என்றால் வேண்டாம் என்று அர்த்தம்,” என்றார் 37 வயது ஃபொன்டெயின்.
அமெரிக்காவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலான அரசதந்திரப் பதற்றத்தைத் தணிக்க நியூக்கில் அமெரிக்கத் தூதரகம் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
ஆனால், ‘கிரீன்லாந்து கிரீன்லாந்துக்காரர்களுக்கானது’ என்று முழக்கமிட்டவாறு நூற்றுக்கணக்கானோர் நியூக் நகரில் பேரணியாகச் சென்று அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி புறமுதுகைக் காட்டியவாறு அமைதியாக நின்றனர்.
சாதாரண மரப்பலகையால் ஆன வளாகத்தில் இருந்த அமெரிக்கத் தூதரகம், 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அது நியூக் நகரில் உள்ள மிக முக்கிய இடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
‘டிரம்ப் கோபுரம்’ என்று அந்த வளாகத்தை அழைக்கும் உள்ளூர்வாசிகள், புதிய இடத்தில் தூதரகம் மாற்றப்பட்டதை எதிர்த்தனர்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, அமெரிக்காவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலான உறவில் சலசலப்பு நிலவும் வேளையில், பெரிய வளாகத்துக்குத் தூதரகம் மாற்றப்பட்டது குடியிருப்பாளர்களின் சினத்தைத் தூண்டியுள்ளது.
தூதரகத்தின் திறப்பு விழாவில் அமெரிக்கத் தேசியக் கீதம் இசைக்கப்பட்டவாறு டென்மார்க்கிற்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஹொவெரி, வளாகத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
தூதரகத்தின் திறப்பு விழாவில் கிரீன்லாந்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவில்லை. கிரீன்லாந்துப் பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.
பிற அமைச்சரவை உறுப்பினர்களும் அங்குக் காணப்படவில்லை.

