காஸா: வட்டாரம் மீதான கட்டுப்பாட்டை கைவிட்டு, இஸ்ரேல் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஹமாஸ் போராளிக் குழுவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் வடக்கு காஸா பகுதியில் பேரணி நடத்தியதாக நேரில் பார்த்த நால்வர் கூறியுள்ளனர்.
கருத்து வேறுபாடுகளை அடக்க அச்சுறுத்தல்கள், கட்டுப்படுத்தும் முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த இரு வாரங்களில் ஹமாசுக்கு எதிராக காஸாவில் நடைபெற்று வரும் போராட்டங்களின் அண்மைய நிகழ்வாக ஏப்ரல் 2 அன்று நடந்த பேரணி உள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
பெய்ட் லஹியாவில் பெண்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது இது முதல்முறை. சிலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.
சிறிய அளவில், பரவலாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை மொத்தமாகப் பார்க்கும்போது, காஸாவில் 18 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்துவரும் ஹமாஸ், 2023 அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து எதிர்கொள்ளும் கடுமையான சவாலாகவே தெரிகிறது.
ஆர்வலர்கள் இந்த வாரம் சமூக ஊடகங்களில் புதிய பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெய்ட் லஹியா பிரதான சதுக்கத்தில் கூடி மற்றொரு சதுக்கத்தை நோக்கி 1,000 முதல் 1,500 பேர் வரை அணிவகுத்துச் சென்றனர் என்று ஆர்ப்பார்ட்டக்காரர்கள் நேர்காணல்களில் கூறினர்.
“வீடுகள், எங்கள் அன்புக்குரியவர்கள், நம்பிக்கை, எதிர்காலம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இதற்குமேல் முடியாது,” என்று 34 வயது திருவாட்டி அபீர் அல்-ரதியா கூறினார். ஏப்ரல் 2ஆம் தேதி இடம்பெற்ற பேரணியில் தனது கணவர், குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றதாக அவர் கூறினார்.
“போரை நிறுத்தி, எங்களை விட்டுவிடுங்கள் என்று ஹமாஸிடம் கோரிக்கை விடுக்கிறோம். இது எப்போது முடிவடையும் என்று தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு அமைதியும் ஜனநாயகமும் வேண்டும்,” என்றார் அவர்.
கடந்த காலங்களில் தன் ஆட்சிக்கு சவால்களைக் கடுமையாக ஒடுக்கிய ஹமாஸ் குறித்து காஸாவில் பரவலான அச்சம் இருந்தபோதிலும் பேரணி முன்னோக்கி சென்றது. அண்மைய போராட்டங்களுக்குப் பிறகு, ஹமாசின் போக்கு மிதமடைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே கோபமடைந்துள்ள மக்களை மேலும் எரிச்சலூட்டுவது குறித்த பயமும் படைகளை அணிதிரட்டும் அதன் திறன் குறைந்து வருவதையும் இது பிரதிபலிப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.
எனினும், ஹமாசின் பழிவாங்கும் அச்சுறுத்தல் இன்னும் உள்ளதாகவே கூறப்படுகிறது.