பிரான்சில் தீவிரமடையும் போராட்டம்: அரசின் €5 பில்லியன் யூரோ சீர்திருத்தங்கள் நிராகரிப்பு

பிரான்சில் தீவிரமடையும் போராட்டம்: அரசின் €5 பில்லியன் யூரோ சீர்திருத்தங்கள் நிராகரிப்பு

படம்: இபிஏ

27 Oct 2026 - 8:40 pm

2 mins read

பாரிஸ்: பிரான்சில் பல வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் அறிவித்துள்ள கல்விச் சீர்திருத்தங்கள் போதுமானதாக இல்லை என ஆசிரியர்களும் மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) தெரிவித்துள்ளனர்.

வகுப்புக்கு அதிகபட்சமாக 28 மாணவர்கள், பள்ளிப் பராமரிப்புக்காக பல பில்லியன் யூரோ கடன், பல்கலைக்கழகச் சேர்க்கை முறையில் மாற்றங்கள் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரெஞ்சு அரசு திங்கட்கிழமை அறிவித்தது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 5 பில்லியன் யூரோ ($5.6 பில்லியன்) செலவினம் பிற துறைகளின் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் ஈடுசெய்யப்படும் என நிதி அமைச்சர் டேவிட் அமியல் கூறினார்.

“இந்த அறிவிப்பு தொடக்கப் பதில் மட்டுமே. இது மாணவர்களின் கோபத்தைத் தணிக்கப் போதாது” என்று ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை மேலும் குறைக்கவும் கற்றல் சூழலை மேம்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் சங்கம் கோரிக்கை விடுத்தது.

போதிய பணியாளர்கள், வளங்கள் இல்லாததைக் கண்டித்துப் பள்ளி மாணவர்கள் தொடங்கிய போராட்டம், பொதுச் சேவை பலவீனமடைதல், வாழ்க்கைச் செலவின ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் தொழிற்சங்கங்கள், ‘மஞ்சள் சட்டை’ அமைப்பினரின் ஆதரவாலும் தீவிரமடைந்துள்ளது.

அரசாங்கம் முன்வைத்துள்ள சீர்திருத்தங்கள் முதற்கட்ட நல்ல நடவடிக்கை மட்டுமே என்ற மாணவர் தலைவர்கள், வரும் சனிக்கிழமையும் நவம்பர் 5ஆம் தேதியும் போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளனர்.

நாடு தழுவிய போராட்டங்கள் வன்முறை, கொள்ளைச் சம்பவங்களாக மாறியதை அடுத்து, சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு போடப்படும் என உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் கொந்தளிப்பு வரவுள்ள அதிபர் தேர்தலில் வலதுசாரித் தலைவரான மரீன் லு பென்னுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்