ஜொஹனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அந்நாட்டின் 510 ராணுவ வீரர்களைக் கடலோர மாவட்டமான குவாசுலு-நட்டால் பகுதிக்கு அங்குள்ள காவல்துறைக்கு உதவிட அனுப்பிவைத்துள்ளார் என்று அவரது அலுவலகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) அறிவித்தது.
அங்கு தென்னாப்பிரிக்காவுக்குள் வந்துள்ள வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் படையினர் நவம்பர் 30ஆம் தேதி வரை அங்கு சேவையாற்றுவர் எனவும் அதற்கு S$2.05 மில்லியன் ($34.1 மில்லியன் ராண்ட் எனப்படும் தென்னாப்பிரிக்க நாணயம்) செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறியப்படுகிறது.
குடிநுழைவுக்கு எதிரான அமைப்புகள் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகும், தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 4ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு முன்பாகவும் அரசாங்கத்தின் இந்தச் செயல்பாடு எடுக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் இவ்வாண்டில் பல மாதங்களாக குடியேறிகளுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து அது அனைத்துலக ரீதியில் கண்டனங்களைப் பெற்றது.
வன்முறைகளும் சில போராட்டங்களில் வெடித்ததோடு ஆயிரக்கணக்கில் அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறிவிட்டனர்.
அடைக்கலம் நாடுவோருக்கென அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் ஜூலை மாதம் வழங்கிய தீர்ப்பு குறித்துத் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டது மக்களின் போராட்டத்துக்கும் வன்முறைக்கும் வழிவகுத்ததாக அதிபரின் அறிக்கை விளக்கியது.
இம்மாதம் குடியேறிகளுக்கு எதிராக குவாசுலு-நட்டால் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரான டர்பனிலும், தலைநகர் ஜொஹனஸ்பர்க்கில் உள்ள சுவேடோவிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டு, வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
டர்பன் நகரில் கடந்த வாரம் ஒரு வெளிநாட்டவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
