ஜகார்த்தா: ஒரு வாரக் கலவரத்துக்குப் பிறகு ஓய்ந்திருக்கும் இந்தோனீசியத் தலைநகரில் போராட்டம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மூண்ட கைகலப்பில் உணவு விநியோக ஊழியர் ஒருவர் மாண்டதற்கு நியாயம் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக இந்தோனீசியாவின் ஆகப் பெரிய மோட்டார்சைக்கிள் டாக்சி சங்கங்களின் தலைவர் ராடென் இகுன் விகாக்சொனோ தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்கள் இன்னும் அதிகமாக வலுக்கவிருப்பதாகச் சொன்ன அவர், மில்லியன்கணக்கான ஓட்டுநர்கள் ‘ஓஜொல்’ புரட்சி என்ற இயக்கத்தின்கீழ் போராடவிருப்பதாகச் சூளுரைத்தார். கோஜெக், கிராப் ஆகிய செயலிகள்மூலம் மோட்டார்சைக்கிள் டாக்சி ஓட்டுநர்களுக்குப் பதிவு செய்வது ‘ஓஜொல்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
ஒருசில வாரங்களுக்கு முன்னர் திரு விகாக்சோனோவும் அவரது சக ஊழியர்களும், மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
செப்டம்பர் 17ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒன்றுகூடி இணையத்தள ஊழியர்களைப் பாதுகாக்கும் சட்டங்களை வகுக்கும்படி போராடவிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 2 மில்லியன் மோட்டார்சைக்கிள் டாக்சி ஓட்டுநர்கள் அதிபர் பிரபோவோ சுபியந்தோவின் அரசியல் அடித்தளத்தை அசைக்கும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளனர்.
ஒவ்வொரு போக்குவரத்து நெரிசலிலும் ஒவ்வொரு தெருமுக்குகளிலும் கோஜெக், கிராப் ஆகியவற்றின் பச்சை சீருடையை அணிந்தவாறு அவர்கள் காணப்படுகின்றனர்.
குறைவான சம்பளம் பெறுவதுடன் பெரிய அளவில் காப்புறுதியுமின்றி காணப்படும் அவர்கள் அரசாங்கம்மீது கடுங்கோபம் கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மோட்டார்சைக்கிள் டாக்சி ஓட்டுநர்களுக்குப் போதுமான பாதுகாப்பை உருவாக்க இந்தோனீசிய அரசாங்கம் நீண்டகாலமாகத் தவறிவிட்டதாகவும் அவர்கள் குறைகூறினர்.
“மில்லியன்கணக்கான சக ஊழியர்கள் சரிவர வாழ முடியாமல் இருப்பதால் இந்தோனீசியாவில் மற்றொரு புரட்சியை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று திரு விகாக்சோனோ குறிப்பிட்டார். அவர் தலைமைதாங்கும் கர்டா சங்கத்தில் 7,000 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.