‘கார்ப்பரேட் மாஃபியா’ விசாரணை குறித்த தகவல்களை வழங்கவும்: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

‘கார்ப்பரேட் மாஃபியா’ விசாரணை குறித்த தகவல்களை வழங்கவும்: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

2 mins read
764fca6f-9cb3-496a-a37e-d64cb88c99db
மலேசிய மின்னிலக்கத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: நிறுவனங்களின் அதிகாரிகளை நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளுடன் வணிகர் கட்டமைப்பு ஒன்று கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு மலேசிய மின்னிலக்கத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நாட்டின் காவல்துறைத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.

‘கார்ப்பரேட் மாஃபியா’ என அழைக்கப்படும் இந்த வணிகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுவரையில், இதில் ஆணையத்துக்கு தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

“அமைச்சரவை கவலை தெரிவித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகப்போகின்றன,” என்று மலேசியாவின் ஆளும் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியான ஜனநாயகச் செயல் கட்சியின் தேசியத் தலைவருமான அமைச்சர் கோபிந்த் சிங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

“வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது,” என்றும் அவர் கூறினார்.

இதனைச் சமாளிக்க மலேசியப் பத்திரங்கள் ஆணையமும் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைக் கூற வேண்டும் என அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார். எந்தவொரு நிறுவனத்திலும் பங்குகளை மாற்ற பலப்பிரயோகம் அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் சந்தை கையாடலில் ஈடுபட்டிருந்தால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

காவல்துறை தலைமையகம், பத்திரங்கள் ஆணையம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பிரதமர் அன்வார் இப்ராகிமின் அலுவலகத் தொடர்பாளர்கள் கருத்து கேட்கப்பட்டபோது பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்