ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் நடத்திய ஆக அண்மைய கலந்துரையாடலில் பெற்றோர், பொதுத் தேர்வுகளால் ஏற்படக்கூடிய மனவுளைச்சல் (பிஎஸ்எல்இ) உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசியிருக்கின்றனர்.
எஸ்டி, அதன் 180ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு (2025) அனுசரிக்கிறது. அதனைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட ‘கான்வர்சேஷன் வித் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எனும் நிகழ்ச்சியின் இறுதிக் கலந்துரையாடல், தோ பாயோவில் உள்ள எஸ்பிஎச் மீடியா நியூஸ் சென்டரில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்றது. அதில் 30 பெற்றோர் கலந்துகொண்டனர். ஓராண்டு நீடித்த அந்தத் தொடர் நிகழ்ச்சியில் செய்தியறையின் ஆசிரியர்களும் செய்தியாளர்களும் பங்கெடுத்தனர்.
கலந்துரையாடலில், தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முக்கிய இடம் பிடித்தது. அதற்கு மாற்று ஏதாவது உண்டா என்று பங்கேற்பாளர்கள் கேள்வி எழுப்பினர். தொடக்கப்பள்ளி முதலாம் நிலைக்கான பதிவுக்கும் ஆலோசனைகள் இருந்தால் கூறும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். பிள்ளைகளின் பள்ளி வாழ்க்கையில் முக்கியமான, நெருக்குதல் தரக்கூடிய கட்டங்களில் அவையும் அடங்கும்.
அவற்றுக்கு எஸ்டி ஆசிரியர் ஜேமி ஹோ பதில் தந்தார். முன்பிருந்ததைவிட இப்போது தேசியத் தேர்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சற்றுக் குறைந்திருப்பதை அவர் சுட்டினார். அதே நேரம், சிங்கப்பூரின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் இருப்பதாகத் திரு ஹோ கூறினார்.
தேர்வு முடிவுகளில் எஸ்டி இப்போது கவனம் செலுத்துவதில்லை என்று அவர் சொன்னார். மனவுளைச்சலைக் குறைத்து, விரிவான அம்சங்களில் கவனம் செலுத்தி, கல்வித் துறை மீதான கண்ணோட்டத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லவேண்டும் என்பதே அதற்குக் காரணம் என்றார் திரு ஹோ.
“மிதமிஞ்சிய மனவுளைச்சலைத் தரக்கூடியவற்றிலிருந்தும் கவனத்தை ஈர்க்கக்கூடியவற்றிலிருந்தும் விலகி, வேறுபட்ட கதைகளின் மூலம் கல்விக்குப் புதிய பரிணாமத்தை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
தேர்வு முடிவுகளுக்கு முக்கியம் தருவதை விடுத்துக் கல்விக்கு அப்பால் சுவாரசியமான சாதனைகளைப் புரிந்த பள்ளிகள்மீதும் மாணவர்கள்மீதும் கதைகள் கவனம் செலுத்துவதாகத் திரு ஹோ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் மூத்த நிருபர்கள் சாண்ட்ரா டேவி, ஜேன் இங், செய்தியறைக் கண்ணோட்டத்திற்கான எஸ்டி ஆசிரியர் டியான் லியாவ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள், பள்ளிகளில் சந்திக்கும் சவால்கள் பற்றியும் பெற்றோர் அக்கறை தெரிவித்தனர். அந்த விவகாரத்தில் இன்னும் விழிப்புணர்வு தேவை என்றும் அவர்கள் கூறினர்.
தொடர்புக்குறைபாடுள்ள ஏழு வயதுப் பெண் பிள்ளைக்குச் சிறப்புப் பள்ளிகளிலும் மாணவர் பராமரிப்பு நிலையங்களிலும் இடம் கிடைப்பது சிரமமாய் இருந்ததாகப் பெற்றோர் ஒருவர் குறிப்பிட்டார்.
இன்னொருவர், வாசிப்புத் திறன் குறைபாடுள்ள 11 வயது மகன் பாரம்பரியப் பள்ளிகளில் படிப்பில் சிக்கலை எதிர்நோக்கியதாகச் சொன்னார். தாம் மாணவராய் இருந்த காலத்தைவிட இப்போது பாடத்திட்டம் வெகுவாய் மாறிச் சுமை கூடியிருப்பதாக அவர் கூறினார்.
அதுபற்றிய கருத்துகளை விவாதித்துக் கூடுதல் சமூக ஆதரவை வழங்க எஸ்டி முயற்சி எடுக்கும் என்றார் திருவாட்டி சாண்ட்ரா டேவி.

