பத்துமலை கோயிலில் முஸ்லிம் இளையர் ஒருவர் பால்குடம் ஏந்தியதற்காக மூன்று மாதங்கள் பள்ளிவாசலில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும்படி ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலிஃப் டானியல் எனும் 21 வயதான முஸ்லிம் இளையர், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் சிலாங்கூர் பத்துமலை கோயிலில் பால்குடம் ஏந்தியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அபராதம் விதித்ததாலும் சிறை தண்டனை வழங்கப்பட்டாலும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படாது என்பதால் இஸ்லாமியப் போதனைகளை அவர் முழுமையாகக் கற்க வேண்டும் என்றும் பள்ளிவாசலில் மூன்று மாதங்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தன் மீதான குற்றத்தை அலிஃப் டானியல் ஒப்புக்கொண்டதால் அவருக்குச் சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படவில்லை என் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“நீங்கள் உங்கள் சமயம் சொல்வதை மட்டும் பின்பற்றுங்கள். பிறர் சமய நம்பிக்கையில் தலையிடவும் அதனை செயல்படுத்துவதும் கூடாது,” என ஷரியா நீதிமன்ற நீதிபதி, அலிஃப் டானியலுக்கு வலியுறுத்தினார்.
இளம் வயது முஸ்லிம்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்திருக்க வேண்டும் என்கிற ஷரியா சட்டத்தை மீறக்கூடாது என நீதிமன்றம் இந்த வழக்கின் வாயிலாகச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் இதுபோன்ற இஸ்லாத்தை இழிவுபடுத்தும்படியான செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
