டோஹா: கத்தார் பிரதமரும் நிதியமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி, டிசம்பர் 28ஆம் தேதி, டோஹாவில் ஹமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்துள்ளார்.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் தெளிவான, விரிவான சண்டைநிறுத்த ஒப்பந்தம் குறித்துக் கலந்துரையாடுவது அச்சந்திப்பின் நோக்கம்.
மூத்த அதிகாரி கலில் அல் ஹய்யா தலைமையிலான ஹமாஸ் பேராளர் குழுவுடன் பிரதமர் ஷேக் முகமது கலந்துரையாடியதாகக் கத்தார் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கத்தார் பிரதமர் இந்த சமரசப் பேச்சில் வெளிப்படையாக ஈடுபடுவது அரிது என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர். காஸா சண்டைநிறுத்தம் குறித்த சமரசப் பேச்சில் மாதக்கணக்கில் முட்டுக்கட்டை நிலவுகிறது.
“சந்திப்பில் சண்டைநிறுத்தம் தொடர்பான அண்மைய விவகாரங்கள் மறுஆய்வு செய்யப்பட்டன. சமரசப் பேச்சை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்தும் மறுஆய்வு செய்யப்பட்டது,” என்று கத்தார் வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சமரசப் பேச்சு மீண்டும் சூடுபிடிப்பதாக இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ‘டோஹா கருத்தரங்கு’ எனும் அரசியல் கருத்தரங்கில் கத்தார்ப் பிரதமர் கூறியிருந்தார்.
திரு டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அவரது நிர்வாகம் அதிக அளவு ஊக்கம் தருகிறது என்றார் அவர்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா, எகிப்துடன் இணைந்து கத்தார், பல மாதங்களாக சமரசப் பேச்சு மூலம் இணக்கம் காண முயன்றுவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் அந்த முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.
நவம்பரில் சமரசப் பேச்சு முயற்சியை நிறுத்துவதாகக் கூறிய கத்தார், ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலும் ‘ஆர்வமும் தீவிரமும்’ காட்டும்போது அது தொடரும் என்றது.