ஜோகூர் பாரு: பேருந்துகள் அல்லது மோட்டார்சைக்கிள்களில் பயணம் செய்யும் மலேசியர்கள் கடப்பிதழ்களுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைக் கொண்டு சிங்கப்பூர்-ஜோகூர் எல்லையில் குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற வகைசெய்யும் முன்னோட்டச் சோதனை, 2025ல் கடற்பாலத்தில் மற்ற வகை போக்குவரத்துக்கும் நீட்டிக்கப்படும்.
ஜோகூர் பாரு சோதனைச்சாவடிகளில் ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை இந்த முன்னோட்டச் சோதனை நடப்பில் இருக்கும்.
இந்த கியூஆர் குறியீட்டு முறை, உச்ச நேரங்களில் எல்லையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துள்ளதாக புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தில் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் திங்கட்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு நேரம் எட்டு வினாடிகளிலிருந்து ஐந்தாகக் குறைந்துள்ளதாக Free Malaysia Today செய்தித்தளம் தெரிவித்தது. அதன்படி, ஒரு மணி நேரத்தில் 750க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளோட்டிகளால் குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற முடிகிறது. முன்னதாக, இந்த எண்ணிக்கை 500 முதல் 600 வரை இருந்தது.
“தற்போதைய தரவுகளின்படி, ஜோகூர் கடற்பாலம் ஆண்டு முழுவதும் 150 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது, இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 116 மில்லியனாக உள்ளது,” என்று திரு சைஃபுதீன் கூறியதை மலாய் மெயில் ஊடகம் மேற்கோள் காட்டியது.
கியூஆர் குறியீட்டு முறையின் கொள்முதல் குறித்த முடிவை 2024ல் இறுதிப்படுத்த அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

