குவாண்டம் பாதுகாப்புத் தொடர்பு முறை: மலேசியாவின் புதிய முயற்சி

குவாண்டம் பாதுகாப்புத் தொடர்பு முறை: மலேசியாவின் புதிய முயற்சி

படம்: பெர்னாமா

09 Nov 2026 - 5:28 pm

1 mins read

கோலாலம்பூர்: இணையப் பாதுகாப்பு புதியதோர் காலகட்டத்துக்குள் நுழையும் இவ்வேளையில், மலேசியா குவாண்டம்-பாதுகாப்புத் தொடர்பு முறையை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

குவாண்டம் கணினித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் அதிகமான வளர்ச்சி, தற்போதைய இணையப் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் புதிய சவால்களை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள சூழலில், தேசியத் தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகத் தனது குவாண்டம் மாற்ற நடைமுறையை ( விரைவுபடுத்துவது குறித்து மலேசியா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

குவாண்டம் கணினிகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கில், குவாண்டம் தடுப்புத் திறன் கொண்ட புதிய மறைகுறியீட்டுத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு, தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னிலக்கப் பாதுகாப்பு அமைப்புகளைத் தரம் உயர்த்துவதே இந்த குவாண்டம் மாற்ற நடைமுறையாகும்.

இதுகுறித்து மலேசியத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் கருத்துரைத்தார்.

“எதிர்காலத்தில் வரவிருக்கும் குவாண்டம் கணினிகள் சந்தைக்குள் நுழையத் தொடங்கும் பொழுது, அது தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க தற்போது பயன்பட்டு வரும் மறைகுறியாக்க முறைகளுக்குப் பெரும் சவாலாக அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், வரும் ஆண்டுகளில் பல நாடுகள் எதிர்கொள்ளவிருக்கும் தலையாய விவகாரங்களில் ஒன்றாக இந்த குவாண்டம் மாற்றமும் குவாண்டம்-பாதுகாப்புத் தொடர்பாடலும் திகழும் என்றும் அமைச்சர் ஃபாஹ்மி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்