6.5 டன் கோழி இறைச்சி பறிமுதலை அடுத்து மலேசியாவில் ஹலால் சான்றிதழ் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன

6.5 டன் கோழி இறைச்சி பறிமுதலை அடுத்து மலேசியாவில் ஹலால் சான்றிதழ் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன

படம்: மலேசிய அரச காவல்துறை

03 Nov 2026 - 8:04 pm

2 mins read

கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இஸ்லாமிய விதிமுறைகளை மீறி அறுக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.5 டன்னுக்கும் அதிகமான கோழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது மலேசியாவின் ஹலால் விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மை குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளது.

சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட இறைச்சிக் கூடங்கள், கோழியைப் பதப்படுத்தும் மையங்கள்மீது வழக்குத் தொடுப்பது உட்பட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதின் ஷாரி நவம்பர் 2ஆம் தேதி வலியுறுத்தினார்.

இறைச்சிக் கூடங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளைத் தவறாமல் கண்காணிப்பதை உறுதிசெய்ய, ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்புகளும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“முக்கியமான செயல்பாடுகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் தேவைகளின்படி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியதாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பல இன மக்கள் வாழும் மலேசியாவில், ‘ஹலால்’ தொடர்பான விவகாரம் மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாகும். இது இனங்களுக்கிடையே பதற்றத்தை உருவாக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் மிகுந்த கவலையளிக்கிறது. ஏனெனில், பூச்சோங்கில் அமைந்துள்ள இந்த நிறுவனம், அதிகாரிகளால் முன்னெச்சரிக்கைகள், நினைவூட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், முறையான ஹலால் சான்றிதழ் இன்றி சுமார் 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது.

இந்தச் செயல்பாட்டின் அளவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இடத்தில் நாளொன்றுக்கு 40,000க்கும் மேற்பட்ட கோழிகள் பதப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து விநியோகிக்கப்பட்ட கோழி இறைச்சி, பூச்சோங், புத்ராஜெயா, டமன்சாரா, செராஸ், பாங்கி உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், உணவகங்கள், பிற வணிக நிறுவனங்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பூச்சோங்கில் உள்ள இந்த வளாகத்திலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் செய்யப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.

இத்தகைய செயல்பாடுகள் இவ்வளவு நீண்ட காலம் எப்படித் தொடர முடிந்தது என்பது குறித்தும் விதிமுறைத் தேவைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், எந்த வகையில் இவ்வளவு பெரிய அளவில் கோழி இறைச்சியைப் பதப்படுத்தி விநியோகம் செய்ய முடிந்தது என்பது குறித்தும் இந்தச் சம்பவம் கவலைகளை எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கோழி இறைச்சிசிலாங்கூர்சான்றிதழ்ஹலால்