லண்டன்: பிரிட்டனில் இயங்கும் ‘ரேடியோ கெரோலின்’ எனப்படும் ஒரு வானொலி நிலையம், மன்னர் மூன்றாம் சாரல்ஸ் மரணமடைந்ததாகத் தவறான செய்தியை வெளியிட்டதற்கு வியாழக்கிழமை (மே 21) மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
அந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு, செவ்வாய்க்கிழமை (மே 19) மதியம் வானொலி நிலையப் பிரதான அரங்கில் இருந்த கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமா வெளியிடப்பட்டது.
அந்த அரங்கம் இங்கிலாந்தின் கிழக்கில் மல்டன் பகுதியில் அமைந்துள்ளது.
பிரிட்டனில் செயல்படும் அனைத்து வானொலி நிலையங்களிலும் அரசக் குடும்பத்தில் ஏதேனும் இயற்கை எய்தும் நிகழ்வுகளுக்கு வெளியிடப்படும் அறிவிப்புகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படுகின்றன. தேவை எழும்போது அவை பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறு அச்செய்திகள் அறிவிக்கப்பட்டதும் வானொலி நிலையங்கள் கட்டாயமாகச் சில நிமிடங்களுக்கு அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போதைய சம்பவத்தில், செய்தி வெளியிடப்பட்டு அது தவறு என உணர்ந்தபின், அமைதி காக்கும் வேளையில் உடனடியாக மன்னிப்புக் கோரும் அறிவிப்பு செய்யப்பட்டு, நிகழ்ச்சிகள் மீண்டும் வழக்கமாக ஒலிபரப்பாகின என்று நிலையம் அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
“மாண்புமிகு மன்னரிடமும் நேயர்களிடமும் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்,” என்று நிலையத்தின் மேலாளர் பீட்டர் மோர் தெரிவித்தார்.
வட அயர்லாந்தில் மன்னர் மூன்றாம் சார்ல்சும், அரசி கமிலாவும் அந்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அதேநாளில் வானொலி நிலையம் அத்தவறான செய்தியை அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பிபிசி ஊடக ஆதிக்கத்துக்கு எதிராக தோன்றிய வானொலி
1964ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கெரோலின் வானொலி, பிபிசி ஊடகத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, கப்பல்களில் இருந்து ஆரம்பத்தில் இயக்கப்பட்டது.

