பேங்காக்: மியன்மாரில் மிக மோசமான மோசடி நிலையங்கள் ஒன்றிலிருந்து கிட்டத்தட்ட 700 பேர் தாய்லாந்துக்குத் தப்பியோடியதாக தாய்லாந்து மாநில அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அந்த மோசடி நிலையத்தில் ராணுவம் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து பலர் தப்பியோடியதாக அந்த அதிகாரி வியாழக்கிழமை (அக்டோபர் 23) கூறினார்.
மியன்மாரில் உள்நாட்டுப் போர் தொடரும் சூழலில் அதிகக் கட்டுப்பாடுகள் இல்லாத அந்நாட்டு எல்லைப் பகுதிகளிலிருந்து பலர் இணைய மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். காதல், வர்த்தக மோசடிகளால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுபோன்ற மோசடி நிலையங்கள் மீது முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நடவடிக்கைகளில் சுமார் 7,000 ஊழியர்கள் நாடுகடத்தப்பட்டனர். மேலும், எல்லை தாண்டிய இணையத் தடுப்பை தாய்லாந்து நடைமுறைப்படுத்தியது.
எனினும், மியன்மாரில் மோசடி நிலையங்களை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வருவதாக இம்மாதம் ஏஎஃப்பி நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அதோடு, மோசடிக்காரர்கள் இலோன் மஸ்க்குக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் இணையக் கட்டமைப்பின் இணைய உணர்க்கருவிகளைப் பயன்படுத்தி ஏமாற்றுச் செயல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்தின் டாக் மாநில துணை ஆளுநர் சவானிட் சூரியாக்குல் நா அயுத்தாயா, வியாழக்கிழமை நிலவரப்படி மியன்மாரில் உள்ள கேகே பார்க் மோசடி நிலையத்திலிருந்து 677 பேர் மோய் ஆற்றின்வழி தாய்லாந்துக்குள் நுழைந்ததாகத் தெரிவித்தார்.


