ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ராவின் தலைநகரான பலெம்பாங்கில் அக்டோபர் 24ஆம் தேதி பிற்பகலில் கனமழை பெய்தபோது, அங்குள்ள குடியிருப்பாளர்கள் பலர் ஒதுங்குவதற்கு இடம் தேடி ஓடவில்லை. மாறாகத் தங்களது கைப்பேசிகளைத்தான் கையிலெடுத்தனர்.
பல வாரங்களாகப் புகைமூட்டத்தில் மூழ்கியிருந்த சாலைகளைக் கழுவிச்சென்று, கூரைகளின் மேல் கொட்டித்தீர்த்த மழையின் காணொளிகள் வெளியான சில மணி நேரங்களிலேயே ‘எக்ஸ்’, ‘திரெட்ஸ்’ ‘டிக்டாக்’ போன்ற சமூக ஊடகத் தளங்களில் வேகமாகப் பரவின.
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த வறட்சிக் காலத்துக்குப் பிறகு கிடைத்த இந்த நிலையை அப்பகுதி மக்கள் வெகுவாகக் கொண்டாடினர்.
“இறைவனுக்கு நன்றி, பலெம்பாங்கிற்கு இறுதியாகக் கனமழை கிடைத்தது. எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது,” என்று உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனமான கருடா தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு பதிவில் ‘எக்ஸ்’ பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அன்றிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலெம்பாங்கின் 1 உலு பகுதியில் வசிக்கும் 60 வயது வாகன நிறுத்துமிட ஊழியரான பிர்மான்ஷா என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், “வார இறுதியில் எங்களுக்குக் கொட்டித்தீர்க்கும் பெருமழை பெய்தது. இன்று காலையில் மிதமான மழை பெய்கிறது. இது இப்படியே நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று கூறினார்.
இந்தோனீசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் காட்டுத்தீக் காலத்திலிருந்து விடுபடக்கூடிய நிம்மதி நெருங்கிவிட்டதற்கான நம்பிக்கையான அடையாளமாக இந்தக் கனமழை பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மீண்டும் பொழியத் தொடங்கியுள்ள மழை அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக இருக்காது என்று வானிலை முன்னுரைப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
காட்டுத்தீ அபாயம் அதிகம் உள்ள சில பகுதிகளில் மழைக்காலம் அக்டோபரிலேயே தொடங்கக்கூடும் என்று ஜகார்த்தாவைச் சேர்ந்த வானிலை முன்னுரைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேக விதைப்பு மூலம் உருவாக்கப்பட்ட மழையையும் சேர்த்து சுமத்ரா, கலிமந்தான் ஆகியவை முழுவதிலும் ஆங்காங்கே பரவலான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மேக விதைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்துள்ளது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. ஏனெனில் இத்தொழில்நுட்பச் செயல்பாட்டுக்கு வானில் தகுந்த மேகங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
