கடும்புயலால் பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்

கடும்புயலால் பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்

1 mins read
வேளாண்மை, சுற்றுப்பயணம், தொழில்துறைக்குக் கூடுதல் தடங்கல்
e56b554d-c3e5-43a9-8eaf-aee658ec26d3
தாய்லாந்தின் சியாங்மாய் மாநிலத்தில் யானை வனவிலங்குப் பூங்காவின் யானைகள் பல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தென்கிழக்காசிய நாடுகள் வரும் மாதங்களில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவைக் காணக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஏற்கெனவே புயலாலும் மழையாலும் பாதிக்கப்பட்ட ஒரு வட்டாரத்தில் வேளாண்மை, சுற்றுப்பயணம், தொழில்துறை ஆகியவை மேலும் அதிகத் தடங்கலை எதிர்நோக்கக்கூடும்.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் ‘லா நினா’ (La Nina) என்ற வானிலை நிகழ்வால் பிலிப்பீன்ஸ் முதல் வியட்னாம் வரை மேலும் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.

இதனால், செப்டம்பர் மாதம் யாகிப் புயலால் வதைக்கப்பட்ட வியட்னாம் அதிலிருந்து மீண்டுவரும் முயற்சிகளும் முடக்கப்படலாம். யாகியால் வியட்னாம் 40 டிரில்லியன் டோங் (S$2.1 பில்லியன்) இழப்பைச் சந்தித்துள்ளது.

சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கும் தாய்லாந்து, வெள்ளப் பாதிப்பால் 30 பில்லியன் பாட் (S$1.18 பில்லியன்) இழப்பை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் ஒன்பது புயல்மழைச் சம்பவங்களுடன் பிலிப்பீன்சும் மீண்டுவருவதற்குத் திணறுகிறது.

“தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் லா நினா வானிலை நிகழ்வு அக்டோபர், நவம்பர் முதல் இருக்கும். வழக்கத்தைக் காட்டிலும் அதிக மழைப்பொழிவுக்கு இது ஒரு காரணமாக இருக்கும்,” என்று ஆசிய நிபுணத்துவ வானிலை முன்னுரைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க, சிங்கப்பூர் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிப்படி, வெப்பம் அதிகரிக்கும் ஒரு பருவநிலையால் தென்கிழக்காசிய நாடுகளின் கரையோரப் பகுதிகளில் புயல்மழைச் சம்பவங்கள் ஏற்படும் அல்லது வீரியமடையும் சாத்தியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்