தீ காரணமாக 2024ஆம் ஆண்டில் பேரளவிலான மழைக்காடுகள் அழிந்தன. நிமிடத்துக்கு 18 காற்பந்துத் திடல்களுக்கு நிகரான பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் தீக்கிரையாகின.
பருவநிலை மாற்றம், கடுமையான வெப்பம், மழைக்காடுகள் உள்ள பகுதிகளில் விவசாய விரிவாக்கம் ஆகியவை அதற்குக் காரணம் என்று புதன்கிழமை (மே 21) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இந்த ஆய்வை மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்தியது.
தீயில் அழிந்த மழைக்காடுகளில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை பிரேசிலுக்கும் பொலிவியாவுக்கும் சொந்தமானவை.
தீயால் அழிந்த மழைக்காடுகளின் பரப்பளவு மத்திய ஆப்பிரிக்காவிலும் அதிகரித்தது. மாறாக, இந்தோனீசியாவிலும் மலேசியாவிலும் அது குறைந்தது.
இந்தோனீசியாவில் பருவமழையும் உள்ளூர் சமூகங்கள் மற்றும் விவசாயத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட காட்டுத்தீ தடுப்பு முயற்சிகளும் அதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
மலேசியாவில் வனப்பகுதிகள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. அத்துடன் பயிரிடும் பகுதிகளுக்கு வரம்பு விதிக்கப்பட்டது. இவை காட்டுத்தீ சம்பவங்களைக் குறைக்க உதவின.