ஊழல் தடுப்பு ஆணையர் அஸாம் பாக்கி பதவி விலகக் கோரி பேரணி

ஊழல் தடுப்பு ஆணையர் அஸாம் பாக்கி பதவி விலகக் கோரி பேரணி

படம்: புளூம்பெர்க்

16 Feb 2026 - 12:37 pm

2 mins read

கோலாலம்பூர்: தனியார் நிறுவன பங்கு சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசியின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி பதவி விலகக் கோரி, கோலாலம்பூர் ‘சோகோ’ கடைத்தொகுதி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) பேரணி நடைபெற்றது.

‘ஒன்றுகூடி போராடுங்கள்: அஸாம் பாக்கியைக் கைது செய்’ என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்புகள் நடத்திய அப்பேரணி ஞாயிறு மாலை 4 மணிக்குத் தொடங்கியதாக ‘வணக்கம்மலேசியா’ தெரிவித்தது.

‘அஸாம் பாக்கியைக் கைது செய்’ என்ற முழக்கங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் அரசியல் கட்சியினர், அரசு சாரா அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என சுமார் 500 பேர் ‘சோகோ’ கடைத்தொகுதி வளாகத்திலிருந்து மெர்டேக்கா சதுக்கம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லி, செத்தியாவங்சா எம்.பி. நிக் நஸ்மி நிக் அஹமது, சுபாங் எம்.பி. வோங் சென், மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் அமிரா அஸ்சா அப்துல் அஸிஸ், பெர்சே தலைவர் ஃபைசல் அப்துல் அஸிஸ், சமூக ஆர்வலர் ஹிஷாமுதின் ரயிஸ் உள்ளிட்டோரையும் பேரணியில் காண முடிந்தது.

பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய வோங் சென், அஸாம் பாக்கி பதவி விலகலை வலியுறுத்தினார்.

பேரணியில் பங்கேற்ற மற்றவர்களும் அதே கோரிக்கையை விடுத்தனர். சர்ச்சைக்குரிய தொழில் அதிபர் ஆல்பர்ட் டெய்ஸியும் அவர்களில் அடங்குவார்.

பேரணி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

வெலோசிட்டி கேப்பிட்டல் பார்ட்னர் நிறுவனத்தில் அஸாம் பாக்கி 17.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளை வைத்திருந்ததாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்ட நிலையில், அவருக்கு எதிராகப் பல தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதனை விசாரிக்க அரசாங்கமும் சிறப்புப் பணிக் குழுவை அமைத்துள்ளது.

விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லுமாறு அரசாங்க ஆதரவு எம்.பிக்கள் உட்பட பலர் நெருக்குதல் கொடுத்துள்ள போதும், அதற்கு அவசியமில்லை என அஸாம் பாக்கி கூறியுள்ளார்.

அவதூறு பரப்பியதாகக் கூறி புளூம்பெர்க் நிறுவனத்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை அஸாம் பாக்கி தொடங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்