தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சில மணி நேரச் சண்டை நிறுத்தத்தின் முதல் நாளில் காஸாவில் அமைதி

3 mins read
ராணுவத்தின் சண்டை நிறுத்த அறிவிப்பிற்கு நெட்டன்யாகு கண்டனம்
9317dea2-2311-445a-b658-58ae771ce692
ஹஜ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் முஸ்லிம் விடுமுறையின் முதல் நாளான ஜூன் 16ஆம் தேதி காஸா எல்லையில் உள்ள கான் யூனிஸ் நகரில் காலை நேரத் தொழுகையில் கலந்துகொள்ளச் செல்லும் சிறுவன். - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேலிய ராணுவம் நிவாரண உதவிப் பொருள்களை அனுமதிக்கும் நோக்கில் ஜூன் 16ஆம் தேதி அறிவித்த சில மணி நேரப் போர் நிறுத்தம் தொடங்கிய முதல் நாளில் காஸாவில் ஓரளவு அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முந்தைய நாள்களுடன் ஒப்பிடுகையில் ‘ஈத் அல்-அதா’வின் முதல் நாளான இன்று ஓரளவு அமைதியாக இருக்கிறது. காஸா முழுவதிலும் இத்தகைய அமைதி நிலவுகிறது,” என்று காஸா குடிமைத் தற்காப்பு அமைப்பின் பேச்சாளர் மஹ்முத் பசால் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் ‘ஈத் அல்-அதா’வை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளில் நான்கு நாள் விடுமுறை அனுசரிக்கப்படும்.

ஜூன் 16ஆம் தேதி காலையில் காஸாவின் வடக்கு, மத்திய பகுதிகளில் சண்டை நடந்ததாகத் தகவல் இல்லை என்று ஏஎஃப்பி செய்தியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் மாலை நேரத்தில் ராஃபா, மத்திய காஸா வட்டாரங்களில் குண்டு வீச்சு, வான்வழித் தாக்குதல் நடந்ததாக அவர்கள் கூறினர்.

அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலில் காயமடைந்த, கொல்லப்பட்டோரில் சிறுவர்களும் அடங்குவர் என்று கூறப்பட்டது.

காஸாவின் தென் பகுதியில் சண்டை நிறுத்தம் இல்லை என்று வலியுறுத்திய இஸ்ரேலிய ராணுவம், ஜூன் 16ஆம் தேதி நடந்த சண்டையில் அதன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

முன்னதாக, காஸாவின் தென்பகுதியில் தினமும் சில மணி நேரம் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ஜூன் 16 ஆம் தேதி, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது.

காஸாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) பலமுறை எச்சரித்ததை அடுத்து, உதவிப்பொருள்கள் மக்களைச் சென்றடைய உதவும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியானது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு, உதவிப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் சாலைகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டா என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

இதையடுத்து, திடீரென்று அமைதியை உணர முடிந்ததாக காஸா குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர். துப்பாக்கிச் சத்தமோ குண்டு வெடிப்புச் சத்தமோ கேட்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஐநா வரவேற்றுள்ளது. உதவி தேவைப்படும் மக்களுக்குக் கூடுதல் உதவி சென்றடைய இது வழிவகுக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, உதவிப் பொருள்களை அனுமதிப்பதற்காக அன்றாடம் சில மணி நேரம் போரை நிறுத்துவதாக இஸ்‌ரேலிய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கண்டித்துள்ளார்.

“11 மணி நேரப் போர் நிறுத்தம் குறித்த தகவலைக் கேட்டதும் பிரதமர் தமது ராணுவ ஆலோசகர் பக்கம் திரும்பி இதைத் தம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெளிவுபடுத்தினார்,” என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார்.

பிரதமர் நெட்டன்யாகுவின் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதாமார் பென்-கிவிரும் சில மணி நேரப் போர் நிறுத்த யோசனைக்குக் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காஸா போருக்காக தான் அமைத்த 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவை கலைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்புச் சொற்கள்