வாஷிங்டன்: ஓராண்டுக்கு முன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாட்டின்படி, சீனா தன்னுடைய ஒப்பந்தங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) பெய்ஜிங்கை எச்சரித்துள்ளது.
முக்கியமாக அரிய கனிமம், விவசாயக் கொள்முதல் தொடர்பில் போடப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் வரும் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் சந்திக்கவுள்ளனர்.
மேலும், டிசம்பர் 14,15 ஆகிய தேதிகளில் மியன்மாரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டிலும் அவர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னர் சீனா நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு அக்டோபரில் தென்கொரியாவின் பூசானில் ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளைச் செயல்படுத்துமாறு அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங்கிடம் தொலைபேசியில் வலியுறுத்தியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
தொலைபேசி அழைப்பில் விவசாயப் பொருள்கள் கொள்முதல், அரிய மண் கனிமங்கள் தொடர்பான கடந்த கால உறுதிப்பாடுகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்குச் சீனா உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை கிரீர் வலியுறுத்தினார்.
மேலும் டிரம்ப் நிர்வாகம் சீனாவுடன் சீரான வர்த்தகத்தைத் தொடரும் என்று கிரீர் கூறினார்.
பூசான் ஒப்பந்தத்தின் கீழ் சீனாவிலிருந்து போதுமான அளவு சில முக்கிய அரிய கனிமங்களைப் பெறுவதில் அமெரிக்க நிறுவனங்கள் சிரமங்களை அனுபவிப்பதாக கிரீர், பெசன்ட் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி புகார் கூறி வருகின்றனர்.
