பெய்ஜிங்: உக்ரைனில் நிலையான அமைதி நிலவ வேண்டுமென்றால், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேசியபிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) கூறினார்.
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மூவரும் சந்திப்பு நடத்தினர்
அண்மையில் அலாஸ்காவில் தமக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில் புரிந்துணர்வு ஏற்பட்டதாகப் புட்டின் கூறினார். இது உக்ரேனில் அமைதியை நிலைநாட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது அதுகுறித்து நடவடிக்கை எடுத்துவருவதாகவும் வரும் நாள்களில் மேல் விவரங்கள் வெளியாகும் என்றும் புட்டின் கூறினார்.
உக்ரேனில் அமைதி நிலவ இந்தியாவும் சீனாவும் பலவிதத்தில் உதவியதைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்ட அவர், உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள பிரச்சினையை அடிமட்ட அளவில் ஆராய்ந்து அதற்கான நிலையான தீர்வை எட்ட வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
கிழக்குப் பகுதிகளில் நேட்டோவின் ஆதிக்கம் குறித்தும் பேசப்பட வேண்டும் அது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் புட்டின் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன்மீது போர் தொடுத்தது. இதை உக்ரேன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் கடுமையாகக் கண்டித்தன. ரஷ்யா உக்ரேனியப் பகுதிகளை அபகரிப்பதாகவும் அவை குற்றஞ்சாட்டின.
ஆனால் ரஷ்யா அதை மறுத்துள்ளது. உக்ரேனின் ராணுவத்தை வலுவிழக்கச் செய்யும் சிறப்பு நடவடிக்கை என்று தற்காத்து பேசுகிறது.

