தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்எச்17 தொடர்பான சுயேச்சை விசாரணையில் உதவத் தயார்: புட்டின்

2 mins read
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தகவல்
3a5744ee-d421-4b77-bd74-31b300c434d4
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (வலம்), அரசியல் குறுக்கீடு இல்லாத, மிகுந்த கவனத்துடன் கூடிய, முழுமையான விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் சுயேச்சை விசாரணைக்கு உதவத் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவன விமானப் போக்குவரத்து மன்றம் அந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் ரஷ்யா மீது குற்றம் சாட்டியதை அடுத்து திரு புட்டின் அவ்வாறு கூறியதாகத் திரு அன்வார் குறிப்பிட்டார்.

அரசியல் குறுக்கீடு இல்லாத, மிகுந்த கவனத்துடன் கூடிய, முழுமையான விசாரணை தேவை என்று அதிபர் புட்டின் வலியுறுத்தியதாக மலேசியப் பிரதமர் கூறினார்.

ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர், விசாரணை அறிக்கையின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில் அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என்று மாஸ்கோவில் மே 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது குறிப்பிட்டார்.

எம்எச்17 விமானம் உக்ரேனிய வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாதான் காரணம் என்ற தீர்ப்பை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்துள்ளது. 2014ஆம் ஆண்டு நடந்த அச்சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேருடன் விமானச் சிப்பந்திகளும் மாண்டனர்.

இதற்கிடையே, ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சர் செர்கே ட்சிவிலெவ், மலேசியாவின் எரிவாயுக் கட்டமைப்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தகத்திலும் முதலீடு செய்வது தொடர்பில் ரஷ்யா பேச்சு நடத்துவதாகப் புதன்கிழமை (மே 14) கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும்படி திரு அன்வார் திரு புட்டினுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் ரஷ்யச் செய்தி நிறுவனமான இன்டெர்ஃபேக்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்