பெய்ஜிங்: வரிவிதிப்பு தொடர்பில் பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதுகுறித்துப் பரிசீலிப்பதாகவும் சீனா வெள்ளிக்கிழமை (மே 2) தெரிவித்துள்ளது.
ஆனால் பேச்சு தொடங்குமுன், உலகச் சந்தைகளையும் விநியோகச் சங்கிலிகளையும் பாதித்துள்ள அதன் வரிகளை நீக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.
சீனாவைத் தண்டிக்கும் விதமாக அதன் பல்வேறு ஏற்றுமதிகளின் மீது அமெரிக்கா விதித்த 145 விழுக்காட்டு வரி ஏப்ரலில் நடப்புக்கு வந்தது. பதிலடியாகச் சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு 125 விழுக்காட்டு வரியை அறிவித்தது.
திறன்பேசிகள், பகுதி மின்கடத்திகள், கணினிகள் போன்ற தொழில்நுட்பப் பொருள்களுக்கு மட்டும் அமெரிக்கா தற்காலிகமாக வரிவிலக்கு அளித்துள்ளது.
வரிவிதிப்பு குறித்துப் பேச்சு நடத்த சீனா முயன்றதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பலமுறை கூறினார். நல்லதோர் ஒப்பந்தத்தை எட்டும் வாய்ப்பு இருப்பதாக ஏப்ரல் 30ஆம் தேதி அவர் மீண்டும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காதான் பேச்சு நடத்த அழைப்பு விடுத்ததாகவும் அதுகுறித்துப் பரிசீலித்து வருவதாகவும் வெள்ளிக்கிழமை கூறிய சீன வர்த்தக அமைச்சு, அதற்குமுன் அமெரிக்கா சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறியது.
அமெரிக்கா பேச்சு நடத்த விரும்பினால் முதலில் அதன் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் ஒருதலைப்பட்சமான வரிகளை ரத்து செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சு சொன்னது.
அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்கத் தரப்பு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்பதை அது காட்டும் என்றும் அதனால் பரஸ்பர நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் இருந்தாலோ பேச்சு என்ற போர்வையில் கட்டாயப்படுத்தவும் மிரட்டவும் முனைந்தாலோ அது பயனளிக்காது,” என்று சீன வர்த்தக அமைச்சு குறிப்பிட்டது.
சீனாவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக உள்ளது என்றும் அது கூறியது.
“சண்டையிடுவதென்றால் இறுதிவரை சண்டையிடுவோம். பேச்சு நடத்துவதென்றால் அதற்கும் தயாராக உள்ளோம். வரிவிதிப்பு, வர்த்தகப் போர் இவற்றையெல்லாம் அமெரிக்காதான் தொடங்கியது,” என்று அமைச்சு சாடியது.