ஜெனிவா: சூடான், காஸா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பூசல்கள் காரணமாக 2023ஆம் ஆண்டு இறுதியில் 75.9 மில்லியன் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
இது முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆக அதிகமாகப் பதிவான எண்ணிக்கையாகும். இந்த தகவலை உள்நாட்டிற்குள்ளே இடம்பெயர்ந்துள்ளவர்களை கண்காணிக்கும் நிலையம் செவ்வாய்க்கிழமை (மே 14) வெளியிட்டது.
அத்தகைய 75.9 மில்லியன் பேரில் 68.3 மில்லியன் பேரில் வன்முறை மற்றும் பூசல்கள் காரணமாக இடம்பெயர்ந்தனர். 7.7 மில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இடமாறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சூடானுக்குள் மட்டும் 9.1 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர். ஒரு நாட்டில் இவ்வளவு அதிகமான மக்கள் இடமாறியது இதுவே முதல்முறை. இடம்பெயர்ன்த பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இடம்பெயர்ந்தவர்களில் மூவரில் இருவர் சூடான், காங்கோ, பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு காஸாவில் 1.7 மில்லியன் பேர் உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். மேலும் புதிதாக 3.4 மில்லியன் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்று நிலையம் தெரிவித்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளதாக நிலையம் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு இறுதியில் 71.1 மில்லியன் பேர் உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த ஈராண்டுகளில் அதிக அளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் முதலிருந்து தொடங்க வேண்டியுள்ளது,” என்று நிலையம் கவலை தெரிவித்தது.
உள்நாட்டிற்குள்ளே இடம்பெயர்ந்துள்ளவர்கள்அகதிகளாக கணக்கிடப்பட மாட்டார்கள். பூசல்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்பவர்களே அகதிகளாகக் கருதப்படுவர்.

