வாஷிங்டன்: பூமியின் வடபகுதியில் கோடைக்காலம் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. ஆனால் ஐரோப்பா, சீனா, அமெரிக்கா போன்றவற்றில் முன்னரே கடுமையான வெப்ப அலைகள் வீசத்தொடங்கிவிட்டன. அங்கு இந்த வார இறுதியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அரிஸோனா, கலிஃபோர்னியா, நெவாடா,டெக்சஸ் போன்ற பகுதிகளுக்கு அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையம் இந்த அதீத வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.100 மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அதிக வெப்பநிலையைக் கையாள்வது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்,போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
சிசிலி, சார்டினியா தீவுகளில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அதீத வெப்பநிலை என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்தது.
வட ஆப்பிரிக்காவிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மொராக்கோ வானிலை ஆய்வு மையம், நாட்டின் தென்பகுதிகளுக்கு அதீத வெப்பநிலைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனாவில் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சில பகுதிகள் அதீத வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே ஆக வெப்பமான ஜூன் மாதம் என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்றத்திற்கான சேவை மையமும் தெரிவித்தன.
துரதிர்ஷ்டவசமாக, புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றம் ‘புதிய இயல்பு நிலையாக மாறிவருகிறது’ என்று உலக வானிலை ஆய்வு அமைப்பின் தலைமைச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் எச்சரித்துள்ளார்.