தோக்கியோ: வரலாறு காணாத அளவில் மழை பெய்ததால் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் உள்ள நரீத்தா விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தில் சிக்கிக்கொண்டவர்.
மேலும் ஒருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிபா மாநிலத்தில் 360 மில்லிமீட்டருக்கும் அதிக உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. அப்பகுதி, தோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ளது.
தற்போதைய காலகட்டம் பொதுவாக ஜப்பானுக்குப் பலர் வந்துபோகும் விடுமுறைக் காலமாகும். இந்நிலையில், கனமழையால் சாலைகளும் ரயில் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 22,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பொதுப் பயனீட்டு அமைப்பான தோக்கியோ இலெக்ட்ரிக் பவர் அதனைத் தெரிவித்தது.
ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சிபா நகரில் நூற்றுக்கணக்கானோர் தற்காலிகப் பாதுகாப்பு இடங்களாகப் பயன்படுத்தப்படும் அரசாங்கக் கட்டடங்களில் இரவைக் கழித்தனர்.
போக்குவரத்து இடையூறுகளால் நரீத்தா விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 7,000 பேர் சிக்கித் தவித்தனர் என்றும் வெள்ளிக்கிழமைக்குத் திட்டமிடப்பட்ட எல்லா விமானச் சேவைகளும் இயல்பாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானச் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் வாய்ப்பு இருந்தாலும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்று அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


