குறைக்கப்பட்ட வரி, சூடுபிடிக்கும் உற்பத்தித் துறை

2 mins read
f57bdf49-5d4a-4846-8912-91eecfa89d6d
90 நாள்களுக்குள் வேகமாகப் பொருள்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் சற்று தணிந்துள்ளது. இரு நாடுகளும் ஒன்றின்மீது ஒன்று விதித்த அடிப்படை வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

சீனாமீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை மேலும் 90 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது ஏற்றுமதி, இறக்குமதி வட்டாரங்களில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. உற்பத்தித்துறையும் முழுவீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த 90 நாள்களுக்குள் வேகமாகப் பொருள்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. அதனால் கப்பல் போக்குவரத்தும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் உள்ள தங்களது உற்பத்தியாளர்களுக்குப் பெரிய அளவில் பொருள்களைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாகச் சோர்வாக இருந்த உற்பத்தியாளர்கள் தற்போது முழுவீச்சில் தங்களது வேலையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கப்பல் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் அதற்குக் கூடுதல் விலைகளைக் கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் 90 நாள்களுக்குள் கப்பல்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதால் நிறுவனங்கள் சற்று நெருக்கடியை எதிர்நோக்குவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

வரிக் குறைப்பு, தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் சில பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சீன உற்பத்தியாளர்களைப் போலவே, அமெரிக்க உற்பத்தியாளர்களும் வரி குறைவாக இருக்கும் நேரத்திலேயே சீனாவுக்கு தங்களது பொருள்களை அனுப்புவதில் குறியாக உள்ளனர்.

தயாரித்த பொருள்களைச் சீனாவில் உள்ள கிடங்குகளுக்கு விரைவாகக் கொண்டு செல்வதிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் இரண்டு நாடுகளிலும் உள்ள வர்த்தகர்கள், தங்களுக்கு வேண்டிய பொருள்களை வரி குறைவாக உள்ள இந்தக் காலக்கட்டத்தில் தங்களது நாட்டிற்குள் இறக்குமதி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சீனா மீதான அடிப்படை வரியை அமெரிக்கா 120 விழுக்காட்டிலிருந்து 54 விழுக்காட்டுக்கு குறைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்