பெட்டாலிங் ஜெயா: பாலியல் உறவில் விருப்பத்துடன் ஈடுபடும் பிள்ளைகளைத் தண்டிக்காமல் அவர்களுக்குத் தேவையான ஆலோசனை வழங்கி, திருத்த வேண்டும் என மலேசியாவின் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் நான்சி ஷுக்ரி புதன்கிழமையன்று (செப்டம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில், பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்துப் பிள்ளைகளும் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் தங்கள் வாழ்க்கையை மீண்டும் வாழவும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், அவர்களின் உணர்வு, அறிவாற்றல், சமூக வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அந்தக் கண்ணோட்டத்தில் இதை அணுகவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வையும் எதிர்காலத்தையும் உறுதி செய்வதற்கான ஆலோசனை, கல்வி, ஆதரவு ஆகியவற்றை வழங்குவதில் அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தும் என்றார் அவர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களும் திட்டங்களும் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிள்ளைகளுக்கான பாதுகாப்பையும் மறுவாழ்வையும் வலியுறுத்துவதாக அமைச்சு தெரிவித்தது.
இதில் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், மறுவாழ்வு நிலையங்கள் போன்ற நிறுவனப் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
“அதே நேரத்தில், பிள்ளைகளை வழிநடத்துவதும் அவர்களைப் பாதுகாப்பதும் பெரியவர்களின் முதன்மையான கடமை. எந்நிலையிலும் அதிலிருந்து விலகி, பிள்ளைகளைத் தவறாக அவர்கள் வழிநடத்தக்கூடாது,” என்றும் அது சொன்னது.
பிள்ளைகளைத் தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, அனைத்துத் தரப்பினரிடையே ஒருமித்த கருத்தும் ஒத்துழைப்பும் தேவை என்பதை வலியுறுத்திய அவர், நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றார்.
சட்டம் மட்டும் இதற்கானத் தீர்வை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதற்கு அதிக விழிப்புணர்வு, வலுவான குடும்பநல அமைப்புகள், சமூகத்தின் ஆதரவு ஆகியவை தேவை. பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் முயற்சிகளில் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து பணியாற்ற அமைச்சு உறுதிபூண்டுள்ளது,” என அமைச்சர் தெரிவித்தார்.