பெய்ஜிங்: சீனாவின் எழுச்சியைத் தடுக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதை அனுசரிக்கும் வகையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு புதன்கிழமை (செப்டம்பர் 3) நடத்தப்பட்டது.
இதுவே சீனாவின் ஆகப் பெரிய ராணுவ அணிவகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அணிவகுப்பை அதிபர் ஸியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் நேரில் கண்டு களித்தனர்.
ராணுவ அணிவகுப்பு விழாவில் பேசிய அதிபர் ஸி, போர் புரிவது அல்லது அமைதியைக் கட்டிக்காப்பது என இரண்டு தெரிவுகள் உலக நாடுகளுக்கு இருப்பதாகக் கூறினார்.
சீனா திண்ணமாக எழுச்சி பெறும் என்று கூறிய அதிபர் ஸி, உலகில் அமைதி நிலவும் என்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிபர் ஸியின் உரை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு காரணமாக சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில், ராணுவ அணிவகுப்பு விழாவில் கலந்துகொண்ட 50,000க்கும் மேற்பட்டோரிடம் அதிபர் ஸி இக்கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கூரை இல்லாத காரில் வலம் வந்தவாறு அணிவகுப்பில் பங்கெடுத்த ராணுவ வீரர்களையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள், கவசவாகனங்கள், ஆளில்லா வானூர்திகள் ஆகியவற்றையும் அதிபர் ஸி பார்வையிட்டார்.
சீன அரசாங்கத்தின் கொள்கைகளைக் குறிக்கும் பதாகைகளை ஏந்திக்கொண்டு தியனன்மென் சதுக்கத்துக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறந்தன.
ராணுவ அணிவகுப்பு விழாவின்போது 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணமயமான பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
ராணுவ அணிவகுப்பு விழாவுக்கு முன்பு, பல நாடுகளின் தலைவர்களை அதிபர் ஸி சந்தித்தார். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அல்ல. அதிபர் ஸியைச் சந்தித்துப் பேசிய தலைவர்களில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் அடங்குவர்.
இதற்கிடையே, அதிபர் ஸியைச் சாடும் வகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
“அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதித் திட்டம் தீட்டும் வேளையில் விளாடிமிர் புட்டினுக்கும் கிம் ஜோங் உன்னுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்,” என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டார்.

