வாரிசு வரிசையிலிருந்து பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை நீக்கவும்: ஆ‌ஸ்திரேலியா

வாரிசு வரிசையிலிருந்து பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை நீக்கவும்: ஆ‌ஸ்திரேலியா

2 mins read
f2eefad3-16e3-49cc-bc43-de7513253157
ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் விண்ட்சர் லண்டனில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) கைதுசெய்யப்பட்டதை முன்பக்கத்தில் வெளியிட்ட நாளேடுகள் சிலவற்றின் பிரதிகள். - படம்: புளூம்பெர்க்

சிட்னி: பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் விண்ட்சரை வாரிசு வரிசையிலிருந்து அகற்றும்படி ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி கோரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் நாடுகள் அமைப்புக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கடிதம் எழுதுவதாக அவர் சொன்னார்.

அதுபற்றி பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரிடம் தெரிவித்திருப்பதாகவும் திரு அல்பனீசி கூறினார். பொதுச் சேவைத் துறையில் ஆண்ட்ரூ தவறு செய்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் விசாரிக்கப்படுகிறார். அமெரிக்காவின் பாலியல் குற்றவாளியான காலஞ்சென்ற ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் அவருக்குத் தொடர்பிருந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அரசு வாரிசுப் பட்டியலில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்றால் அது பிரிட்டனால்தான் முடியும். ஆனால் அதற்கு காமன்வெல்த் அமைப்பில் உள்ள மற்ற 14 நாடுகளின் ஒப்புதல் தேவை என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர். காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் தலைவர், மன்னர் மூன்றாம் சார்ல்ஸ்.

“ஆஸ்திரேலியா, அதில் முதல் படியை எடுத்துவைக்க விரும்புகிறது. எங்களின் நிலை என்ன என்பதை மற்ற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிசெய்திருக்கிறோம். எங்களின் நிலை குறித்து மற்ற நாடுகளுக்கும் கடிதம் எழுதவிருக்கிறோம்,” என்று திரு அல்பனீசி குறிப்பிட்டார். அரசாங்க ஒலிபரப்பு ஊடகமான ஏபிசிக்கு அளித்த நேர்காணலில் அவர் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆஸ்திரேலிய மாநிலங்கள், வட்டாரங்களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகத் திரு அல்பனீசி சொன்னார். பிரிட்டனின் வாரிசுப் பட்டியலில் மாற்றம் செய்வதற்கு அவற்றின் ஒப்புதலைப் பெறவேண்டியதும் அவசியம்.

திங்கட்கிழமை திரு ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், திரு மவுன்ட்பேட்டன் விண்ட்சரை வாரிசுப் பட்டியலிலிருந்து அகற்றுவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கும் என்று திரு அல்பனீசி குறிப்பிட்டிருந்தார். முன்னாள் இளவரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர்.

குறிப்புச் சொற்கள்