வாஷிங்டன்: தனக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததும் மீண்டும் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் போகலாம் என்று ஈரான் கூறியிருக்கிறது.
எனினும், போருக்குத் தீர்வோ அதற்கான முன்னேற்றமோ தென்படுவதாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானின் பங்காளி நாடான சீனாவின் அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்த பிறகு நாடு திரும்பினார். ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கவேண்டும் என்று இருவரும் அந்த இரண்டு நாள் மாநாட்டில் ஒப்புக்கொண்டனர். ஆனால், அதன் தொடர்பில் இரு தலைவர்களும் எந்த முன்னேற்றத்தையும் கண்டதாகத் தெரியவில்லை.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள விரும்பாமல் இருக்கிறது. போர் நிறைவடைந்த பிறகும் அப்பாதையை ஓரளவாவது தனது கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவதாக ஈரான் வலியுறுத்தி வருகிறது.
எண்ணெய் ஏற்றுமதியில் இடையூறுகள்
பாரசீக வளைகுடாவழி செல்லும் கப்பல்களுக்கு ஈரான் மிரட்டல் விடுத்து வருவதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் அதிகம் உள்ள அவ்வட்டாரத்திலிருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவது பெரும் இடையூறாக இருந்து வருகிறது. அதன் காரணமாக எரிசக்தி விலை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. அதோடு ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் அந்த அம்சத்தைக்கொண்டு பேரம் பேசி வருகிறது.
அனைத்துலகச் சட்டக் கட்டமைப்புக்கு உட்பட்டு ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் சரியான கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் பசூட் பெஸெஷ்கியான் விவரமளிக்காமல் கூறியிருந்தார்.
சீனாவும் அமெரிக்காவும் ஒத்துப்போகும் அம்சங்கள்
கப்பல்கள் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை கூடுமானவரை விரைவில் திறக்கப்படவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) சொன்னதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மத்திய கிழக்குப் பூசல் தொடர்பில் உலகின் இரண்டு ஆகப் பெரிய பொருளியல் நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் எதிராளிகளாக இருந்தாலும் ஒத்துப்போகும் அம்சங்களைப் பற்றி திரு டிரம்ப்பும் திரு ஸியும் வலியுறுத்திய நிலையில், திரு வாங் யி இவ்வாறு கூறினார்.
சீனாவிலிருந்து நாடு திரும்பும்போது திரு டிரம்ப், ஈரானிய எண்ணெய்யை வாங்கும் சீன நிறுவனங்கள்மீதான தடை உத்தரவுகளை விலக்குவது குறித்து தாம் திரு ஸியுடன் பேசியதாகத் தெரிவித்தார்.

