பெய்ஜிங்: மேம்பட்ட சில்லுகளைத் தொலைவிலிருந்து அணுகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதை வாஷிங்டன் தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அதேவேளை, கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு டிரம்ப் நிர்வாகத்தை அது வலியுறுத்தியுள்ளது.
அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) சில்லுகளைச் சீனா அணுகுவதற்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, பெய்ஜிங்கில் உள்ள வர்த்தக அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 17) கடும் அதிருப்தியையும் உறுதியான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியது.
சீன அதிபர் ஸி ஜின்பிங் இவ்வாண்டின் மூன்றாவது உச்சநிலை மாநாட்டிற்காக அமெரிக்க அதிபரை வரவேற்கவிருந்த சில நாள்களுக்கு முன்பு இக்கட்டுப்பாடுகள் வந்துள்ளன.
“கருத்து வேறுபாடுகளைக் கலந்தாலோசனை, ஒத்துழைப்பு மூலம் தீர்க்கும் சரியான பாதைக்கு அமெரிக்கா திரும்பும் எனச் சீனா நம்புகிறது. அமெரிக்கா பிடிவாதமாக இருந்தால், தமது இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன்களை உறுதியாகப் பாதுகாக்கச் சீனா எதிர்நடவடிக்கை எடுக்கும்,” என்று அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நடவடிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்களின் புரிந்துணர்வுகளுக்கு எதிரானவை என்றும், அவை உலகளாவிய பகுதி மின்கடத்தி விநியோகத் தொடரின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும் அது குறிப்பிட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டில் இரு வல்லரசுகளுக்கு இடையில் எட்டப்பட்ட வர்த்தகச் சமரசம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் காலாவதியாகிறது.
திங்கட்கிழமையன்று, (நவம்பர் 16) அமெரிக்கா அறிவித்த விதிகள், சீன நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே ‘என்விடியா’ பகுதி மின்கடத்திகளை வாடகைக்கு எடுப்பதையும், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் வழியாகப் பெறுவதையும் தடுக்க முயல்கின்றன.
சீனாவுக்கான சில்லுக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக எதிர்த்த என்விடியா முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் பதவி விலகலுக்குப் பிறகு, கடுமையான கட்டுப்பாடுகளைச் சீனா எதிர்பார்த்திருந்தது.
பெய்ஜிங்குடனான தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பை ஆழப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயல்கிறார்.
செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 17) மணிலாவில் ‘குவாட்’ குழுமத் தலைவர்கள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களது முதல் உச்சநிலை மாநாட்டை நடத்தினர். அப்போது, முக்கியக் கனிமங்களுக்கு எந்தவொரு ‘தனி வெளிநாட்டு விநியோகிப்பாளரையும்’ நாடுகள் சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை டிரம்ப் ஊக்குவித்தார். இது சீனாவையே மறைமுகமாகக் குறிப்பதாக அமைந்தது.
