நஜிப்புக்குப் புதிய வீட்டுக்காவல் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை

நஜிப்புக்குப் புதிய வீட்டுக்காவல் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை

நீதிமன்றத்திடம் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் கோரியது
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

10 Nov 2026 - 6:21 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் கோரியுள்ளது.

செப்டம்பரில் மலேசிய மாமன்னரின் பொது மன்னிப்பு ஆணையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தெரிவித்தார்.

புதிய உத்தரவுக்கான விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைத் தலைமைச் சட்ட அதிகாரி முகம்மது துசுகி மொக்தர் உறுதிப்படுத்தினார். இந்த விண்ணப்பம், திருத்த விண்ணப்பம் என்று அழைக்கப்படுவதாக அவர் கூறினார்.

முன்னதாக, நஜிப்புக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த விடுவிப்பு ஆணையில் தவறுகளும் குறைபாடுகளும் இருந்ததாக துசுகி கூறியதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் ஊடகம் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான சட்ட விவகாரங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையைத் தலைமைச் சட்ட அலுவலகம் முன்னதாகச் சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கிடையே, நஜிப்புக்கு வீட்டுக்காவலை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சிறைத்துறைக்கு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு ஆணையின் விளக்கமும் விடுவிப்பு ஆணையின் தாக்கமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.

சிறைத்துறையின் நடவடிக்கையால் எவரும் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படாததைச் அத்துறை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.

நஜிப் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியுள்ளதைத் தொடர்ந்து, மேற்கூறிய இரு ஆணைகளின் தாக்கம் குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும்வரை வீட்டுக்காவல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது.

விடுவிப்பு ஆணை உயர் நீதிமன்றப் பதிவாளரால் பிறப்பிக்கப்பட்டது என்றும் அது குறித்து தலைமைச் சட்ட அலுவலகத்திடம் அமைச்சு கருத்து கேட்டுள்ளது என்றும் திரு சைஃபுதீன் விளக்கினார்.

இந்நிலையில், நஜிப் இருந்ததாக நம்பப்படும் வாகனம் ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் சிறைப் பாதுகாப்பு வாகனங்களுடன் காஜாங் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்சிறைமலேசியா