வியந்தியன்: தங்கம் தேடியும், உணவுக்காக வௌவால்களைப் பிடிக்கவும் லாவோஸில் உள்ள ஒரு குகைக்குள் மே மாதம் 20ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் எழுவர் நுழைந்தனர்.
அன்று பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குகைக்குள் சிக்கிய அந்த ஏழு பேரில் இதுவரை ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டனர்.
எஞ்சிய இருவரைத் தேடி இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெள்ளம் புகுந்த குகைக்குள் போராடிவந்த மீட்புப் பணியாளர்கள் அந்த முயற்சியைக் கைவிடுவதாக சனிக்கிழமை (ஜூன் 6) அறிவித்தனர்.
லாவோஸ் உட்பட அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பாளர்கள் இத்தனை நாள்கள் முயன்றும் பலனில்லாமல் போனது. குகைக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்தாலும் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணிகள் நிறுத்தப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு சவால்கள்
முக்குளிப்பாளர்களுக்கும் மீட்புப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு சவால்கள் ஏற்பட்டுள்ளதே முயற்சி கைவிடப்படுவதன் முக்கிய காரணமாகும் என்று அதிகாரிகள் கவலையுடன் விளக்கமளித்தனர்.
தேடுதல் முயற்சியால் ஏற்படக்கூடிய அபாயம் அந்த இருவரைக் கண்டுபிடிப்பதைவிட மிக ஆபத்தாகிவிட்டதால் வேறு வழியில்லாமல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக மலேசியாவைச் சேர்ந்த லீ கியன் லாய் என்ற முக்குளிப்பாளர் கூறினார்.
காணமல்போன இருவரின் குடும்பங்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

