பேங்காக்: அண்டைவீட்டார் வளர்க்கும் நாய்க்குட்டி அடிக்கடி குரைத்து சத்தம் போடுவதாக தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பில் வசிக்கும் ஆடவர் ஒருவர் பலமுறை புகார் செய்தும் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பில் செல்லப் பிராணிகளை வளர்க்கக்கூடாது என்ற விதிமுறை நடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விதிமீறல் குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த ஆடவர், குடியிருப்புக் கட்டடத்தின் பொதுத் தாழ்வாரத்தில் இரண்டு பாம்புகளை விட்டுச் சென்றார்.
அந்த இரண்டு பாம்புகளும் பொதுத் தாழ்வாரத்தில் ஊர்ந்து செல்வதைக் காட்டும் காணொளியை அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
தாம் அளித்த புகார் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படாவிடில் மேலும் பல பாம்புகளைக் கொண்டுவர இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, பாம்புகளைக் கட்டடத்திலிருந்து அப்புறப்படுத்தும்படி அந்த ஆடவருக்குக் கூட்டுரிமைக் குடியிருப்பின் மேலாண்மைக் குழு எழுத்துபூர்வ எச்சரிக்கை விடுத்தது.
வீட்டில் நாய் வளர்க்கும் குடியிருப்பாளருக்கு அது 10,000 பாட் (S$395) அபராதம் விதித்தது.
அக்குடியிருப்பிலிருந்து நாய் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அது உத்தரவிட்டது.

